இம்சை அரசன் வடிவேலுவுக்கு ரெட் கார்டு?

பட அதிபர்கள் சங்கம் வழங்கியுள்ள ஒரு வார இறுதி கெடுவுக்கு நகைச்சுவை நடிகர் பணியவில்லையெனில் படங்களில் நடிப்பதற்கு தடை (ரெட் கார்டு) வரக்கூடும் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த 2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்டது.

மீண்டும் அதே கூட்டணி இணைந்தது.  வடிவேலுவுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளம் முன்பணமாக கொடுத்து நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இப்படத்திற்கு பல கோடி செலவில் அரங்குகள் அமைத்து படபடப்பிடிப்பு ஆரம்பித்தது. ஆனால் சில நாட்கள் மட்டும் நடந்த இந்த படப்பிடிப்புக்கு வடிவேலு பிறகு  சம்பளம் அதிகம் வேண்டும் என்றார். இந்த விவகாரம் இழுத்துக்கொண்டே போக,  நடிக்க முடியாது என வடிவேலு விலகிவிட்டார்.

படப்பிடிப்பு நின்றதால் அரங்குகள் பிரித்து விட்டனர். இதனால் பல கோடி செலவு செய்தது வீணானதாகவும், படத்தில் வடிவேலு தொடர்ந்து நடிக்க வலியுறுத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திடம் ஷங்கர் முறையிட்டார். இதற்கு விளக்கம் கேட்டு வடிவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால், அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என வடிவேலு தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் முறையிட்டார். அதில்  படத்துக்கு செலவழித்த 9 கோடியை வடிவேலு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என மற்றொரு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” படத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று வடிவேலுக்கு ஒரு வார கால கெடு விதிக்கப்பட்டுள்ளது. வடிவேலு மறுக்கும் பட்சத்தில், அவருக்கு நடிக்க தடை விதிக்கப்படும் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.