டெல்லி: குடியரசு தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடியரசுதின விழா கொண்டாட்டத்தின் போது விவசாயிகள் பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை நடத்தினர்.

பேரணி செங்கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில்  அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி சென்றதால் வன்முறை ஏற்பட்டு  தலைநகரமே போர்க்களமாக காட்சியளித்தது. இதையடுத்து பேரணி பாதியிலேயே கைவிடப்பட்டது.

வன்முறையில் தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்ய முயன்றனர். நடிகர் தீப் சித்து, சுப்தீர் சிங், இபார் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் செங்கோட்டையில் வாள் சுழற்றிய மணீந்தர் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந் நிலையில் மணீந்தர் சிங் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிட்டம்பூராவில் அவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த 2 வாள்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து, மணீந்தர் சிங்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.