சென்னை: செம்மரக்கட்டைகள் கடத்தல் தொர்பான வழக்கில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்பந்தியும், ஜெயா தொலைக்காட்சிதலைமை நிர்வாகி விவேக்கின் மாமனாரும் ஆன  பாஸ்கரனை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்து உள்ளனர்.

பாஸ்கரன்

சசிகலாவின் உறவினரான இளவரசி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், இளவரசின் சம்பந்தியும்,   ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக உள்ள விவேக்கின் மாமனாருமான பாஸ்கரன் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஸ்கரன் மீது தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்மீது  செம்மரங்களை  திருட்டுத்தனமாக வெட்டி வெளிநாடு களுக்கு கடத்துவதாக ஆந்திராவில் அவர்மீது  பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  வருவாய் புலனாய்வு பிரிவினரும் பாஸ்கரன் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  செம்மரக் கட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்தியது தொடர்பான வழக்கில், ஆந்திராவில் இருந்து சென்னை வந்த போலீசார், பாஸ்கரனை கைது செய்துள்ளனர்.  பின்னர் அவரை, சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் சென்று, கைது விவரத்தை தெரிவித்து விட்டு ஆந்திரா அழைத்துச் சென்றனர்.

பாஸ்கரன் சென்னை அண்ணா நகர் மேற்கில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஜெயா டிவி அலுவலகம் மற்றும் சசிகலா உறவினர்கள் வீடுகள் உள்பட  135 இடங்களில் சோதனை நடைபெற்றறது. அப்போது, விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.