டில்லி:

வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறைத்துள்ளது.

அதுபோல பிக்சட் டெபாசிட் எனப்படும்  வைப்புநிதி மீதான வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு, வங்கிகளின் செயல்பாடுகளிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள விதிமுறை களில் பல மாற்றங்களை  கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே வங்கிகளின் மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறைந்த பட்ச வைப்பு தொகையை அதிகரித்து உத்தரவிட்டது. இதற்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சேமிப்பு கணக்குக்கான குறைந்த பட்ச வைப்பு தொகையை குறைத்து மாற்றி அறிவித்து உள்ளது. இந்த புதிய விதிகள் இன்று (அக்.,1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது,  வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் 5 அடிப்படை புள்ளி களைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவீதத்திலிருந்து 8.30 சதவீதமாக குறைத்துள்ளது. இது வங்கித் துறையிலேயே மிகவும் குறைவானதாகும்.

இதேபோல், வாகன கடன்களுக்கான வட்டிவீகிதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாக குறைத்துள்ளது.

இந்த வட்டிக்குறைப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.