சென்னையில் மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையை 62 ரூபாய் வரை குறைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு வரை மத்திய அரசே நிர்ணயம் செய்துவந்த சமையல் எரிவாயுக்களுக்கான விலையை, 2014ம் ஆண்டு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே பிரதமர் மோடி தலைமையிலான அரசு அந்தந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு நிர்ணயம் செய்யும் உரிமையை வழங்குவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து பெட்ரோல் – டீசல் விலை ஏற்றம் செய்யப்படுவது போல 15 நாட்களுக்கு ஒருமுறை என்றும், மாதம் ஒரு முறை என்றும் மாறி மாறி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இதனால் 2014ம் ஆண்டு ரூ. 460 செலுத்தி சமையல் எரிவாயு பெற்ற மக்கள், திடீரென ரூ. 600 வரை செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தொடர்ந்து விலை ஏற்றம் காணப்பட்டதால், மானியமில்லா சிலிண்டர் பெறும் மக்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்தது. இதன் காரணமாகவே மாதம் ஒருமுறை விலை நிர்ணையம் செய்யும் முடிவை இந்தியன் ஆயில் உட்பட சில நிறுவனங்கள் கையிலெடுத்தனர்.

இத்தகைய சூழலில், தற்போது மானியமில்லா சிலிண்டருக்கான விலையை குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு சென்னைக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ. 652.50 கொடுத்து மானியமில்லா சமையல் எரிவாயுக்களை பெற்ற மக்கள், இன்று முதல் ரூ. 590.50-க்கு சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.