டெல்லி: திருமணத்திற்கு மறுத்த காதலியை, மாடியிலிருந்து தூக்கி வீசிய காதலன்!

டில்லி:

திருமணம் செய்ய மறுத்த காதலியை ஆத்திரத்தில் மாடியில் இருந்து தூக்கி வீசினார் காதலர். இந்த சம்பவம் தலைநகர் டில்லியில் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைநகர் டெல்லியில் அதிக அளவுக்கு நடைபெற்று வருகிறது. பெண்கள் பணி செய்ய இயலாத மாநிலமாக டில்லி மாறி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. சமீபத்தில் ஒரு இளம்பெண் ஒருவர் நடுரோட்டில்  பட்டப்பகலில் வாலிபரால் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அதன் வடு மறைவதற்குள் மற்றொரு கொடூர சம்பவம்  அரங்கேறியுள்ளது.

maadi

டெல்லியின் மங்கள் பூரி எனும் பகுதியில் உள்ள அவந்திகா என்கிளேவ்  அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள இளம்பெண் ஒருவரை  அமித் என்ற வாலிபர்  காதலித்து வந்துள்ளார். இருவரும் இரண்டு ஆண்டுகள் காதல் வானில் சிறகடித்து பறந்துள்ளனர்.

இதன் காரணமாக காதலியை  திருமணம் செய்ய எண்ணி அவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் காதலியிடம் இருந்து திருமணத்திற்கான சிக்னல் கிடைக்காததால், வாலிபர் நேரடியாக காதலியின் வீட்டிற்கே சென்று பெண் கேட்க முடிவு செய்தார்.

இதையடுத்து, அமித் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். ஆனால்,  அவரைக்கண்டதும்,  அப்பெண்ணின் தாயார் மற்றும் சகோதரி, அமிரை  வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.  ஆனால், அவர்களை பொருட்படுத்தாக அமித், நேரடியாக தனது காதலியிடம் சென்று,  “என்னை திருமணம் செய்து கொள்வாயா.. மாட்டாயா?” என்று கோபமாக கத்தியுள்ளார்.

திருமணம் செய்ய அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே கோபம் தலைக்கேறிய அமித், தனது காதலியான அந்த பெண்ணை  தூக்கி அவரது வீட்டின் பால்கனியிலிருந்து கீழே போட்டு விட்டார்.

இதில் அப்பெண் பலத்த காயமடைந்தார். அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தாயாரும், சகோதரியும் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவரது கை, கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அமித்தை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  போலீசாரிடம்,  அந்த பெண் தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டு தர மறுக்கிறார். அதனால் கோபமடைந்து அப்படி செய்ததாக அமித் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் மூலம் மூலம்  அறிமுகம் ஆகி நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

அமித்-க்கு சரியான  வேலை கிடைக்காமல்  வெட்டியாக சுற்றிக் கொண்டிருப்பதை அறிந்த அப்பெண்ணின் தாயார்  மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணமாக  அமித்தை திருமணம் செய்ய அவரது காதலி மறுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம், அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது