ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையை விளக்கும் ”நளினி” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு அனுமதி மறுப்பு
மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் இளமைக்கால வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1878-79 வரையிலான காலக்கட்டத்தில் மராத்தி பெண்ணுடன் ரவீந்திரநாத் தாகூருக்கு இருந்த உறவை விளக்கும் திரைப்படத்தை பிரியங்கா சோப்ராவிற்கு சொந்தமான நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையை ஆவணபடுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக தயாரிப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
ரவீந்திரநாத் தாகூர் மற்றும் மராத்தி பெண்ணுடன் இருந்த உறவை விளக்கும் திரைப்படத்திற்கு நளினி என்று பெயரிடப்பட்டது. இதற்கான படப்பிடிப்பை மேற்குவங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் எடுக்க தயாரிப்பு குழு திட்டமிட்டது. ஆனால் படப்பிடிப்பிற்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தாகூரின் வாழ்க்கைமுறையை பற்றி அறிந்த வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டப்பிறகு இத்தகைய முடிவிற்கு வந்ததாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ”தாகூரின் வாழ்க்கை பற்றிய திரைப்படத்திற்கு பல்கலைக்கழகத்தினுள் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க மாட்டோம். இந்த திரைப்படம் பல மில்லியன் மக்களின் மனதை காயப்படுத்த கூடும்” என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அவர்களின் முடிவை நளினி திரைப்படத்தின் இயக்குனர் உஜ்வால் சட்டர்ஜீ ஏற்றார். ”இது கல்வி கற்கும் இடம். வர்த்தக ரீதியாக எடுக்கும் படப்பிடிப்பு மூலம் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலை சீர்குலைக்க விரும்பவில்லை” என்று உஜ்வால் கூறினார். மேலும், தாகூரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்த படம் அவரின் ஆவணங்கள் மற்றும் விரிவான அராய்ச்சிகளை அடிப்படையாக கொண்டது. தாகூர் தனது 17 வது வயதில் அன்னபூர்னா துர்கா என்ற பெண்ணுடன் இருந்த உறவு முறையை இத்திரைப்படம்விளக்கும் என்று கூறினார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த குடும்ப நண்பரான துர்கா, தாகூர் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு மேற்கத்திய பழக்கவழக்கங்களை கற்று கொடுத்துள்ளார். பல்கலைக்கழகத்தின் துணை தலைவரான சுவப்பன் குமார் தத்தா படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்ததாக திரைப்படத்தின் இயக்குனரான சட்டர்ஜீ கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இது தாகூரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய திரைப்படம் என்றும் வாதிட்டார். ”அனைத்து திரைப்படங்களும் வர்த்தக ரீதியாக பார்க்கப்படுகின்றன. ஆனால் நளினி போன்ற ஒரு திரைப்படங்கள் மட்டுமே கலைகளை விளக்கும் விதமாக உள்ளன” என்றும் அவர் கூறினார்.
விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்கப்படுவதால் அதில் படப்பிடிப்பை நடத்த துணை தலைவரான தத்தா முன்பு ஒப்புதல் அளித்திருந்தார். திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்க மத்திய அரசு பரிந்துரை செய்யும் பட்சத்தில் படத்தின் கதையில் சிறு மாறுதல்கள் ஏற்படும் என சட்டர்ஜீ தெரிவித்தார்.