சீன விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : சிவசேனா

மும்பை

சீன எல்லை மோதல் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் போட்டிகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையான லடாக் பகுதியில் உள்ள கல்வான்பள்ளத்தாக்கில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர்.  சுமார் 70க்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர்.  இது தொடர்பாகச் சீனாவுக்கு இந்திய மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்னும் குரலும் நாடெங்கும் பரவி வருகிறது.

இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றியுள்ளதாகவும் அதை மத்திய அரசு மறைப்பதாகவும் காங்கிரஸ் கூறி வருகிறது.  ஆனால் அதை மறுக்கும் மத்திய அரசை ஆளும் பாஜகவினர்  இந்திய எல்லைப்பகுதியில் 43000 கிமீ நிலப்பரப்பை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இழந்துள்ளதாக தெரிவித்தது.  இதைக் காங்கிரஸ் மறுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், “கல்வான் பள்ளத்தாக்கில் சீனா புதிய கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது.  சீன வீரர்கள் அருணாச்சல பிரதேசம், சிக்கிம் வழியாக இந்தியாவினுள் வருகிறார்கள். ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியை மறந்து ஒன்றிணைவதற்கான நேரம் இது ஆகும். .

தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளைச் சீனா மேற்கொள்வது இந்தியாவின் தலைவலியை அதிகரிக்கிறது.   மொத்தத்தில் சீனா போரை விரும்பவில்லை என்றாலும் இந்தியாவை எல்லையில் போர் பதற்றத்தில் வைத்திருப்பதுதான் அதன் கொள்கை ஆகும்..

தனது படைகளை கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து திரும்பப்பெறத் தயாராக உள்ளதாக சீனா கூறுகிறது   ஆனால்் லடாக்கின் டெப்சாங் பகுதியில் புதிய கூடாரங்களை நிறுவியுள்ளது. டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா மீது போர் அச்சுறுத்தலைத் தக்க வைக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.