சென்னை:

ட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நேரடி நியமனம் 30% வழங்கப்பட்டு வந்த நிலை யில், தற்போது, அதை  50% ஆக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே  70% காலியிடங்கள் ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்ட நிலையில், தற்போது 50%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவிகிதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள வட்டாரக்கல்வி அலுவலர்களை, 50 சதவீதம் வரை நேரடி நியமனம் செய்யும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுவரை 30 சதவீதமாக இருந்த நேரடி நியமனத்தை 50 சதவீதமாக அதிகரித்திருப்பது நிர்வாக நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று தெளிவுப்படுத்தியுள்ள பள்ளி கல்வித்துறை, தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கண்டறிந்து வட்டாரக்கல்வி அலுவலர்களாக பணிநியமனம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.

வட்டார கல்வி அலுவலர் என்பவர் யார்? அவரது பணி என்ன?

வட்டார கல்வி அலுவலர் பணியிடம் கடந்த ஓராண்டு முன்பு உருவாக்கப்பட்டது.  பள்ளிகளை கண்காணிக்கும் நோக்கில் இந்த பதவி உருவாக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரிய ராக பணியாற்றுபவர்கள் வட்டார கல்வி அலுவர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி, உதவி கல்வி அலுவலர்களாக இருந்தவர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு மாற்றப்பட்ட போது அவர்களின் அதிகாரமும் உயர்த்தப்பட்டது. இதனால் அவர்களுக்கான வேலை பணிகள் மற்றும் பொறுப்புகள் அதிகமானது.

சிபிஎஸ்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதேபோல அரசு பள்ளிகள் என அனைத்திற்கும் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பது முதல் அதனை நேரடியாக கண்காணிப்பது என அதிக பணி சுமைகள் இருந்தன. பதவி உயர்வு மூலமாகவோ அல்லது பணி மாறுதல் மூலமாகவோ வட்டார கல்வி அலுவலர் பணியிடம் நிரப்படுவது 70% ஆக இருந்தது. 30 சதவிகித பணியிடங்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக நடத்தப்படும் என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. நேரடி நியமனம் 30%- லிருந்து 50%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50% வட்டாரக்கல்வி அலுவலர்களை நேரடி நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.