டெல்லி:

அனைத்து மாநில மொழி திரைப்படங்களையும் ஹிந்தி பேசுவோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஹிந்தி மொழியில் சப் டைட்டில்கள் அல்லது டப்பிங் செய்ய வேண்டும் என்ற நடைமுறை செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

மாநில மொழிப் திரைப்படங்களில் இனி ஹிந்தி மொழி சப் டைட்டில்கள் இடம் பெற வேண்டும் அல்லது ஹிந்தியில் டப்பிங் செய்ய வேண்டும் என்று அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு தேசிய சினிமா மேம்பாட்டு கழகத்திற்கான (என்எப்டிசி) பணிகளை பரிந்துரை செய்துள்ளது.

மேலும், திரைப்பட தயாரிப்பாளர்கள் படத்தின் முழு திரைக்கதையையும் ஹிந்தி மொழியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் படப்பிடிப்பு, அனிமேஷன் பணிகளுக்கு என்எப்டிசி உதவி புரிய வேண்டும். என்எப்டிசி மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு திரைப்படங்களுக்கு நிதியுதவி அளித்தல், தயாரிப்பு, விநியோகம் போன்றவற்றில் உதவிபுரிய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.

திரைப்பட திருவிழாக்களில் என்எப்டிசி சார்பில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்தோ அல்லது ஹிந்தியில் சப் டைட்டில்களுடன் இடம்பெற வேண்டும். இதன் மூலம் சிறந்த திரைப்படங்களை ஹிந்தி மொழி ரசிகர்கள் பார்த்து புரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பிறகு திரைப்பட தயாரிப்பு தொடர்பாக துணை விதிகளை என்எப்டிசி உருவாக்கிக் கொள்ளவும் குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. என்எப்டிசி.யில் செயலிழந்து காணப்படும் டப்பிங் பிரிவு இந்த பரிந்துரைகளை ஏற்க மறுத்துவிட்டது.

எனினும் இது தொடர்பாக எவ்வித உத்தரவும் இது வரை வரவில்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, திரைப்பட திருவிழா இயக்குனரகமும் தெரிவித்துள்ளன. உத்தரவு வந்த பிறகு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.