மும்பையில் உயரத் தொடங்கிய பத்திரப்பதிவு வருவாய்!

மும்பை: இந்தியாவின் விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சந்தையான மும்பையில், பத்திரப் பதிவு வருவாய் தற்போது அதிகரித்திருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய கால அளவை தொடவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது முடிவடைந்த ஜூலை மாதத்தில் பத்திரப்பதிவு வருவாய் ரூ.242 கோடியாக இருந்தது. ‍அதேசமயம், கடந்த ஜூன் மாதம் பத்திரப் பதிவு வருவாய் ரூ.169 கோடியாக இருந்தது. ஆனால், கொரோனாவுக்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் பத்திரப்பதிவு வருவாய் ரூ.470 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முடிவடைந்த ஜூலை மாதத்தில், பதியப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 21311 ஆகும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில், பத்திரப் பதிவின் மூலம் கிடைத்த வருவாய் வெறும் ரூ.43000 ஆகும்.

ஏனெனில், ஊரடங்கு அமல்செய்யப்பட்ட முதல் மாதம் என்பதால், இம்மாதத்தில் வணிக நடவடிக்கைகள் சுத்தமாக முடங்கியதோடு, ஸ்டாம்ப் டூட்டி வசூல்கூட நின்றுபோனது.

கடந்த மே 18ம் தேதி, மும்பையிலுள்ள அனைத்து 26 பத்திரப் பதிவு அலுவலகங்களையும் திறப்பதற்கு மராட்டிய அரசு முடிவு செய்தது. ஆனால், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட காரணிகளால, வெறும் 5 அலுவலகங்கள் மட்டுமே தொடக்கத்தில் இயங்கின.

தற்போதைய நிலையில், மாநகரிலுள்ள மொத்தம் 26 அலுவலகங்களும் முழு அளவில் இயங்கத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி