சென்னை: பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் துவங்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

அதேசமயம், அலுவலக வேலைநேரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது; ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்பட உள்ளன. அனைத்து பணியாளர்களும் முகக் கவசம் அணிந்தே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களும் முகக் கவசம் அணிந்தே அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். அலுவலகப் பணியில் இருக்கையில், சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாள் ஒன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20ம் தேதி முதல், பாதிப்பு குறைந்த துறைகளில், ஊரடங்கை தளர்த்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, சில துறைகள் மற்றும் தொழில்துறைகளின் மறுஇயக்கம் சார்ந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கியுள்ளன.