சென்னை:
சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் பத்திரப் பதிவுப்பணிகள் தொடங்கும் என பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் குறிப்பிடத்தக்க சில தொழில் மற்றும் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், நாளை முதல் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுகள் தொடங்கும் என பதிவுத் துறை தலைவர் ஜோதி நிர்மலா தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அனைவருக்குமான பொதுவான அறிவுரைகளையும் அவர் சுற்றறிக்கையில் இணைத்துள்ளார். அதில் ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன்கள் வீதம் ஒரு நாளைக்கு 24 டோக்கன்கள் விநியோகிக்கப்படும் வகையில் மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, பதிவுத் துறை தலைவர் ஜோதி நிர்மலா பிறப்பித்துள்ள உத்தரவில்,  ஊரடங்கு அமலில் இருந்தாலும், தற்போது நிலவும் சூழல் அடிப்படையில், சார் பதிவாளர் அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும். ஒவ்வொரு அலுவலகத்திலும், குறைந்தபட்சம் மூன்று அலுவலர்கள் இருக்கும் வகையில், பணி ஒதுக்க வேண்டும்.பத்திர பதிவுக்காக வருவோர் கை கழுவ தண்ணீர், கிருமி நாசினி வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

‘தெர்மல் ஸ்கேனர்’ கருவியை பயன்படுத்தி, பரிசோதித்த பின், மக்கள் அனுமதிக்கப்படுவர். தினமும், 24 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும். கைரேகை பெறுதல், புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அதிகம் என, தடை செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களின் பத்திரங்களை, பரிசீலனைக்கு ஏற்க வேண்டாம். இப்பகுதியில் உள்ள அலுவலகங்கள், தற்காலிகமாக அருகில் உள்ள, வேறு அலுவலகத்துக்கு மாற்றப்படும்.தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பணியாளர்களுக்கு, விலக்கு அளிக்கப்படுகிறது.

அத்துடன், 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. செயல்பட முடியாத அலுவலகங்கள் குறித்த விபரங்களை, மேலிடத்துக்கு தெரிவித்து, உரிய வழிகாட்டுதல்கள் பெற வேண்டும்.

இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.