மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கான பதிவேடு – புதிய திட்டம்!

புதுடெல்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் தொடர்பான ஒரு பதிவேட்டைப் பராமரிக்க வேண்டுமென்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு திட்டமிடலை தொடங்கியுள்ளது ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்).

இதன்மூலம், சிகிச்சை பலன்களை அதிகரித்தல், நோய் பரவலின் தீவிரத்தை ஆய்வுசெய்தல் மற்றும் அதன் விளைவுகளை கணித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியுமென கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் எய்ம்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, இந்தப் பதிவேடு தொடர்பான ஒத்துழைப்பை மேற்கொள்ளவுள்ளது ஐசிஎம்ஆர். இந்தப் பதிவேடு கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்விடம், அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்கள், சிகிச்சையின் விளைவுகள், மருத்துவமனை மற்றும் ஆய்வக அம்சங்கள் உள்ளிட்ட விபரங்களை, இந்தப் பதிவேட்டின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.