டில்லி:

பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் சம்பளத்தை தவிர்த்து வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம், கூடுதல் சுகாதார காப்பீடு, உடல் பரிசோதனை, பயணப் படி, உடற்பயிற்சி கட்டணம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல செலவினங்கள் ஊழியர்களுக்கு திருப்பி வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் தொகைக்கு வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.  இந்த தொகைக்கு இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலை வரவுள்ளது. அதனால் கார்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் கூடுதல் ஜிஎஸ்டி.யை தவிர்க்கும் நடவடிக்கையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. அதே சமயம் இந்த செலவினங்கள் அனைத்தும் சம்பளத்தில் சேர்க்கப்பட்டால் வருமான வரி தாக்கலின் போது கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை ஊழியர்களுக்கு ஏற்படும்.

கேரளாவை சேர்ந்த காலணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கேன்டீன் மூலம் உணவு சேவை வழங்கி வருகிறது. இதற்கான கட்டணத்தை ஊழியர்களிடம் இருந்து வசூலித்து வருகிறது. அதனால் இந்த தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்று அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த முடிவால் வரியை மிச்சப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கேண்டீன் சேவையை நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டு, அதற்கு பதிலாக சம்பளத்தல் அதற்கான தொகையை சேர்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மொத்த சம்பளம் அதிகரித்து கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஊழியர்களுக்கு ஏற்படவுள்ளது.