வைரஸ் இல்லாத இளைஞர்..  ஆனாலும் வேட்டையாடிய கொரோனா..

’’ வரும் ..ஆனா வராது..’’ என்ற சினிமா டயலாக் போல், ’’கொரோனாவால் இளைஞர் சாகவில்லை.. ஆனாலும் செத்துப்போனார்’’ என்று கூறும் வகையில், சோக சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள பிஜ்னோர் மாவட்டம் மாலக்பூர் கிராமத்தை சேர்ந்தவர், மஞ்சித் சிங்.

டெல்லி சென்று விட்டு அண்மையில் சொந்த கிராமத்துக்கு திரும்பினார்.

ஊர் வருவதற்கு முன்பாக பிஜ்னோரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ளதா? என தெர்மல் பரிசோதனை செய்து கொண்டார்.

அந்த சோதனையில் நோய் தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது.

பரிசோதனையை அறிக்கையை வாங்காமல் ஊர் வந்து சேர்ந்தது அவரது உயிருக்கே உலை வைத்து விட்டது.

மஞ்சித் சிங்கின்  2 மைத்துனர்கள், அவரை பார்க்கும் போதெல்லாம் ’’கொரோனா பரிசோதனை செய்து கொள்’’  என்று வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஏற்கனவே சோதனை செய்ததாக மஞ்சித் சொன்னதை அவர்கள் நம்பவில்லை.

சம்பவத்தன்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு மஞ்சித் சிங்கிடம், மைத்துனர்கள் தகராறு செய்துள்ளனர்.

மோதல் முற்றி ஒரு கட்டத்தில், மஞ்சித் சிங் தலையில் மைத்துனர்கள் , கட்டையால் அடித்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த மஞ்சித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.

அவரை கொலை செய்த மைத்துனர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

 –  ஏழுமலை வெங்கடேசன்