திருமணத்துக்கு வெளியில் உறவு தண்டனைக்குரிய குற்றமில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் தண்டனைக்குரிய  குற்றச் செயல் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருமணமான பெண்ணும் திருமணமான வேறொரு ஆணும் பாலியல் உறவு கொண்டால், அதில் ஆணுக்கு மட்டும் தண்டனை என்பது இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497 கூறுகிறது.

1860ல் இந்த சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கைது செய்யப்படும் ஆண்கள், பாலியல் வன்புணர்வு என்ற குற்றத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதற்கு 5 வருடம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

இந்த சட்டப்பிரிவிற்கு எதிராக மூன்று காரணங்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது இந்த சட்டப்பிரிவின் கீழ் எப்படி ஒரு ஆண் மட்டுமே தண்டிக்கப்படலாம். இது பாலியல் சமத்துவத்திற்கு எதிரானது. இன்னொன்று , இதில் பெண்கள் ஆண்களின் சொத்துக்கள் போல பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்க வேண்டும். கடைசியாக பாலியல் உறவு என்பது இருவரின் உரிமை. இருவரும் முழு விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்ளும் போது, அதில் தவறில்லை என்பதாகும்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி நாரிமன், நீதிபதி சந்திரசூட், நீதிபதி கான்வில்கர், நீதிபதி இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பை அளித்துள்ளது.  அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த சட்டப் பிரிவையே செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள்,  திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல் குற்றச் செயல் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

கணவர் என்பவர் பெண்ணின் உரிமையாளர் அல்ல. இருவரும் சமமானவர்கள். திருமண பந்தத்திற்கு வெளியே உறவில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் இல்லை. தவிர தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை என்பது சட்டவிரோதமாகும். தகாத உறவால் யாரும் தற்கொலை செய்து கொள்ளாதவரை இதை குற்றச் செயலாக கருத முடியாது. இதனால் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு சட்டவிரோதமானது என்று தெரிவித்து அதை நீக்கி உள்ளனர்.