இந்தியா-ஈரான் உறவு எரிபொருளுக்காக மட்டும் கிடையாது….ஹமீத் அன்சாரி

டில்லி:

எரிபொருள் வழங்கும் நாடாக மட்டும் ஈரானை இந்தியா பார்க்க கூடாது முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.

1990ம் ஆண்டுகளில் ஈரானுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றியுள்ள முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கூறுகையில்,‘‘ஈரானுடனான இந்தியாவின் உறவு கடந்த கால அரசுகளால் கவனமாகவம், சிந்தனையுடனும் கட்டமைக்கப்பட்டது. பெர்சியன் கல்ஃப் பிராந்தியத்தில் வெறும் எரிபொருள் விநியோகம் செய்யும் நாடாக மட்டும் ஈரானை இந்தியா கவனத்தில் கொள்ளக் கூடாது.

மாற்று கோணத்தில் ஈரானின் உறவை இந்தியா பார்க்க வேண்டும். பாகிஸ்தான் கோணத்தில் இருந்து பார்க்கும் போது ஈரான் இந்தியாவுக்கு நில சக்தியாக விளங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு மாற்று வழியை ஈரான் வழங்குகிறது. புவிசார் அரசியல் அமைப்பாக ஈரான் விளங்குகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஈரான் நாட்டின் எல்லைப் பகுதிகள் பல நாடுகளோடு இணைந்து உள்ளது. இவற்றை இந்தியா நேரடியாக பயன்படுத்த முடியாத நிலையை பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ளது. அதனால் எரிசக்தி மட்டுமின்றி அனைத்து விதமான உறவுகளையும் ஈரானுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் இந்தியாவின் கட்டமைப்பு பணிகள் ஈரான் மூலமாக தான் மேற்கொள்ளப்படுகிறது.

ஈரானில் உள்ள சாபகார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்திருப்பதும் ஆப்கானிஸ்தானை எளிதில் அணுகும் நோக்கம் கொண்டது தான். பல நாடுகளோடு ராஜாங்க அடிப்படையில் தான் இந்தியா உறவு கொண்டுள்ளது. அதே சமயம் ஈரானின் உறவு என்பது பல ஆண்டுகளாக முக்கியத்துவம் குறையாமல் இருந்து வருகிறது’’ என்றார்.

முன்னதாக, ஈரானிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை இந்தியா குறைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரின் ஐ.நா. பிரதிநிதி நிக்கி ஹெலே தெரிவித்திருந்தார். இவரது கருத்தை தொடர்ந்தே ஹமீத் அன்சாரி ஈரானின் முக்கியத்துவம் இந்தியாவிற்கு அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.