ஸ்ரீநகர்

வீட்டுக் கைதிகளாக உள்ள காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களை அவர்கள் குடும்பத்தினர் நேற்று சந்தித்தனர்.

விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் சென்ற மாதம் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொலைத் தொடர்பு மற்றும் இணைய வசதிகள் முடக்கப்பட்டன.  சுமார் 45க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் காஷ்மீர் மக்கள் இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதில் சுமார் 42 தலைவர்கள் காஷ்மீர் ஏரிக்கரையில்  உள்ள செண்டோர் ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா குப்கர் சாலையில் உள்ள ஹரி நிவாஸ் மாலீக்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாளிகை காஷ்மீரின் கடைசி மன்னரான ஹரி சிங் கட்டிய மாளிகையாகும். கடந்த 1947 இல் இந்த மாளிகையைக் கட்டிய அரசர் இந்த மாளிகையால் தனக்கு தோல்வி ஏற்பட்டது என்னும் தனது நம்பிக்கை காரணமாக இந்த மாளிகைக்குக் குடி பெயரவில்லை.

உமர் அப்துல்லாவைச் சந்திக்க அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆயினும் உமர் அப்துல்லாவின் சகோதரி சஃபியா கான் மற்றும் அவர் குழந்தைகள் சனிக்கிழமை அன்று அவரை சந்தித்துள்ளனர்.

அதன் பிறகு மீண்டும் நேற்றும் சந்தித்துள்ளனர். அப்போது உமர் அப்துல்லா அடையாளம் காண முடியாதபடி தாடியுடன் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உமர் அப்துல்லாவுக்கு ஓட்டப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரிடம் உள்ள டிவிடிக்களை பார்க்கவும் அவருக்குக் காவலில் வைக்கப்பட்ட முதல் வாரத்தில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஆயினும் உமர் அப்துல்லா எப்போதும் அறையின் உள்ளேயே இருப்பதாகவும் மிகவும் அபூர்வமாக வெளியில் வருவதாகவும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

சஷ்மாசாகி பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி  காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த மாளிகை இதற்கு முன்பு ஹுரியத் தலைவர்களான முர்வாயிஸ் உமர் ஃபரூக்  மற்றும் சையத் அலி ஜிலானியை காவலில் வைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மெகபூபாவை அவர் தாயார் குல்ஷன் பேகம் மற்றும் சகோதரி ருபியா சயீத் ஆகியோர் சந்தித்துள்ளனர்.  மெகபூபா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  ரூபியா சயீத் 1990களில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர். இவரை மீட்கத் தீவிரவாதி மசூர் அசார விடுவிக்கப்பட்டான்.