கோல்பாரா, அசாம்

ரசால் வெளிநாட்டவர் எனக் கூறி அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டு மரணம் அடைந்த முதியவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் குடியுரிமை பட்டியலில் சேர்க்கப்படாதவர்களை வெளிநாட்டினர் என அரசு அறிவித்து வருகிறது.   மேலும் அவர்களை  ஆதரவற்றோர் முகாமில் அரசு சேர்த்து விடுகிறது.   இதற்கு மாநிலம் எங்கும் கடும் எதிர்ப்பு உள்ளது.    இதை போல் சேர்க்கப்பட்ட முதியவர் மரணம் அடைந்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கோல்பா நகரில் உள்ள 10 ஆம் நம்பர் வார்டின் பார்பெட்டா சாலையில் வசித்தவர் அம்ரித் தாஸ்.   சுமார் 70 வயதை தாண்டிய இவரை வெளிநாட்டவர் தீர்ப்பாயம் கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் இந்தியாவை சேர்ந்தவர் அல்லர் என தீர்ப்பளித்தது.   இதனால் அவரை அரசு அகதிகள் முகாமில் வலுக்கட்டாயமாக சேர்த்தது.

அந்த முகாமில் இருந்த தாஸ் நோய்வாய்ப்பட்டதால் கோல்பாரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   கடந்த 6 ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.   அவருடைய உறவினர்கள் அதே நகரில் வசித்து வருகின்றனர்.   அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.   ஆனால் முதியவரின் உடலை வாங்கி இறுதிச் சடங்கு செய்ய  உறவினர்கள் மறுத்துள்ளனர்.

அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், “அம்ரித் தாஸ் வெளிநாட்டவர் என அரசு கூறி உள்ளது.   எனவே அரசு அவர் எந்த நாட்டவர் என கண்டறிந்து  அங்கு அவர் உடலை அனுப்பி இறுதிச் சடங்குகளை செய்விக்க வேண்டும்” என கோபத்துடன் கூறி உள்ளார்.   கோலாபூராவில் அசாம் மாணவர் சங்கத்தினர் இந்த விவகாரத்தில அரசின் போக்குக்கு கடும் கண்டனம் தெர்வித்துள்ளனர்.

மாணவர் சங்க தலைவர் பேதாந்த நாத், “அவர் இந்தியக் குடியுரிமை இல்லாததால் தனது வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளார்.  அவரால் தான் வெளிநாட்டவர் எனவும் நிரூபிக்க முடியவில்லை.  அந்த அகதிகள் முகாமில் உள்ள அனைவரும் தங்கள் அடிப்படை உரிமைய இழந்து வாடுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.