புதுடெல்லி: ஆன்லைன் மருந்து விற்பனையில் ஈடுபட்டுவரும் நெட்மெட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனம். இதன்மூலம், அமேசானுக்கு இந்தியாவில் போட்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ். இந்நிறுவனம், நெட்மெட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ரூ.620 கோடிக்கு வாங்கியுள்ளது.

இதன்மூலம், நெட்மெட்ஸ் நிறுவனத்தின் அங்கமான விட்டாலிக் ஹெல்த் நிறுவனத்தின் 60% பங்குகளும், டிரிசாரா ஹெல்த் பிரைவேட் லிமிடெட், நெட்மெட்ஸ் மார்க்கெட் பிளேஸ் லிமிடெட், தாதா பார்மா டிஸ்டிரிபியூஷன் ஆகிய நிறுவனங்களின் 100% பங்குகளும் ரிலையன்ஸ் வசம் வந்துள்ளன.

விட்டாலிக் ஹெல்த் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் கூட்டாக சேர்த்து நெட்மெட்ஸ் என அழைக்கப்படுகிறது.

நெட்மெட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது குறித்து, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் இஷா அம்பானி கூறியதாவது, “இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் டிஜிட்டல் வசதியை வழங்கும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாகும் இந்த முதலீடு. தரமான, விலை குறைந்த சுகாதாரப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தை பலப்படுத்துவதாகவும் இந்த கையகப்படுத்துதல் அமைந்துள்ளது” என்றார்.

அமேசான் நிறுவனம் அண்மையில், ‘அமேசான் ஃபார்மஸி’ என்ற பெயரில், ஆன்லைனில் மருந்து வினியோக சேவையில் இறங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமும் தற்போது போட்டியாக களம் கண்டுள்ளது.