ஆகஸ்ட் 15 முதல் ரிலையன்ஸ் வழங்கும் புதிய பிராட் பேண்ட்
மும்பை
ரிலையன்ஸ் ஜியோ பிராட் பேண்ட் துறையில் தனது காலடியை பதித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சேர்மன் முகேஷ் அம்பானி இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அப்போது அவர் ரிலையன்ஸ் ஜியோ ஆப்டிக் ஃபபர் கேபிள்கள் மூலம் நாடெங்கும் 1100 நகரங்களில் பிராட் பேண்ட் சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
அவர், “கடந்த சில நாட்களாக சோதனை செய்யப்பட்டுள்ள ஜியோ கிகா என்னும் பிராட் பாண்ட் வரும் ஆகஸ்ட் 15 முதல் பொதுமக்களுக்கு வழங்கபட உள்ளது. இந்தியாவில் 1100 நகரங்களில் உள்ள பொதுமக்கள், வியாபரிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் பயனடைவார்கள். இந்த ஜியோ கிகாவில் ஒரு ஃபைபர் கேபிள் ரூட்டர், ஒரு டிவி செட் டாப் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
அத்துடன் இந்த செட் டாப் பாக்ஸ் மொபைல் மற்றும் பிராட் பேண்ட் மூலம் வீடியோ கால்கள் செய்ய பயன்படுத்த ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிராட் பேண்ட் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இருக்கும். உலகத்திலேயே இந்த வேகத்தில் சேவை வழங்குவது ஜியோ கிகா மட்டுமே ஆகும்.
இதற்கான பதிவு வரும் ஆகஸ்ட் 15 முதல் மை ஜியோ செயலி மற்றும் ஜியோ.காம் இணைய தளங்கள் மூலமாக பதிவு செய்யப்படும். அத்துடன் பதிவைப் பொறுத்து ஜியோ கிகா பிராட் பேண்ட் சேவை மேலும் விரிவாக்கபடும். கிகா டிவியை பொறுத்தவரை அந்த செட் டாப் பாக்ஸ் ரிமோட்டை குரல் மூலம் இயக்க முடியும். அத்துடன் அனைத்து ஒளிபரப்புக்களையும் இந்த செட் டாப் பாக்ஸ் மூலம் கண்டு களிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.