மும்பை :

கொரோனா வைரஸ் காரணமாக உலக வல்லரசுகளே பொருளாதாரச் சிக்கலில் சிக்கிச் சீரழிந்து வரும் நிலையில், முகேஷ் அம்பானி மட்டும் உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்.

எந்தத் தொழிலில் முதலீடு செய்வது, எதில் முதலீடு செய்யக்கூடாது என்ற புள்ளிவிவரத்தில் கைதேர்ந்த உலகின் முன்னணி முதலீட்டாளர் வாரன் பஃபெட்-டை முந்தி உலக அளவில் ஆறாவது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, அனில் அம்பானியின் ரத்த சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை கூகிள், பேஸ்புக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று பெரும் தொகை பார்த்திருக்கும் முகேஷ் அம்பானி, தற்போது இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்நுட்ப, சில்லறை விற்பனை மற்றும் சேவைத் துறை நிறுவனங்களை வாங்க திட்டமிட்டிருக்கிறது. வரவிருக்கும் நாட்களில் அம்பானி வாங்க இருக்கும் சில நிறுவனங்களின் பட்டியல் :

பிக் பஜார்

பிக் பஜார் போன்ற சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வரும் பியூச்சர் குரூப் நிறுவனத்தின் பெரும் பங்கினை சுமார் 25000 கோடி ரூபாய்க்கு வாங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அது முடியும் தருவாயில் உள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அர்பன் லாடர்

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அர்பன் லாடர் எனும் பர்னீச்சர் கம்பெனியை 225 கோடி ரூபாய்க்கு வாங்கும் திட்டமும் அம்பானிக்கு கைகூடி வருகிறது.

மில்க் பாஸ்கெட்

மில்க் பாஸ்கெட் எனும் ஆன்லைன் பல்பொருள் அங்காடியை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே அமேசான் மற்றும் பிக் பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.

நெட்மெட்ஸ்

சென்னையைச் சேர்ந்த ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட்மெட்ஸை ரூ. 900 கோடி முதலீட்டில் வாங்க நடவடிக்கை எடுத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், ப்ரக்டோ, 1 எம்.ஜி. போன்ற மற்ற நிறுவனங்களையும் வாங்கி ஆன்லைன் மருந்து விற்பனையில் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த எண்ணியுள்ளது.

மளிகை, பர்னீச்சர், ஆடைகள், மருந்து என்று கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள் ஆன்லைனில் வாங்கத் தேடும் பொருட்களை விற்கும் நிறுவனங்களை நல்ல விலைக்கு வாங்கி அதன் மூலம் அமேசான், அலிபாபா நிறுவனங்களைப் போன்று இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் தனது சாம்ராஜயத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.

இதில், ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியா சீனா இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக தடை செய்யப்பட்ட 59 செயலிகளில் ஒன்றான டிக்-டாக் செயலியின் இந்திய உரிமையை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பிசினஸ் டுடே இதழில் வெளியாகி இருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.