டில்லி

ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி சிறைக்கு செல்லமாட்டார் எனவும் எரிக்சனுக்கு பாக்கியை செலுத்தி விடுவார் எனவும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மொபல்கள் கொள்முதல் செய்தவகையில் எரிக்சன் நிறுவனத்துக்கு தரவேண்டிய ரூ.571 கோடியில் ரூ.453 கோடி பாக்கி வைத்துள்ளது.   இது குறித்து உச்சநீதிமன்றம் இரு முறை பணம் செலுத்த உத்தரவிட்டும் அனில் அம்பானி செலுத்தாமல் உள்ளார்.

தற்போது இறுதி கெடுவான மார்ச் 19க்குள் பணத்தை செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அவ்வாறு செலுத்தவில்லை என்றால் அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

இது குறித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தனக்கு கடன் அளித்துள்ள வங்கிகளிடம் ரூ.260 கோடி பணம் தங்கள் சார்பாக எரிக்சனுக்கு அளிக்க வேண்டுகோள் விடுத்தது.   அத்துடன் வருமானவரித்துறையில் இருந்து வரவேண்டிய பாக்கியை இந்த தொகைக்கு ஈடாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது/

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அதிக அளவில் பாரத ஸ்டேட் வங்கி கடன் அளித்துள்ளது.   ஸ்டேட் வங்கியின் வழக்கறிஞர் என் கே கவுல் இது குறித்து, “வருமான வரி பொதுமக்களின் பணத்தில் இருந்து செலுத்தபட்டதாகும்.   பொதுமக்களின் பணத்தை எடுத்து கடனுக்கு அளிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எந்த உரிமையும் கிடையாது.

ரிலையன்ஸ் நிறுவனம் வரும் மார்ச் 19 ஆம் தேதிக்குள் தனக்கு வர வேண்டிய நிலுவை தொகைய வசூல் செய்து எரிக்சனுக்கு அளித்து விடும் என நம்புகிறோம்.   அனில் அம்பானி நிச்சயம் நீதிமன்ற உத்தரவை மீறி சிறைக்கு செல்ல மாட்டார்.” என தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவன வழக்கறிஞரான கபில் சிபல், “வருமான வரித்துறை ரிலையன்ஸுக்கு அளிக்க வேண்டிய ரூ.260 கோடி பாக்கியை அளிக்காத நிலையில் எரிக்சனுக்கு ஆதரவாக தொலைதொடர்புத் துறை நடந்துக் கொள்வது தவறானதாகும்” என தெரிவித்துள்ளார்.