மும்பை: தமது நிறுவனம், இந்த நிதியாண்டிற்குள் முற்றிலும் கடனில்லாத நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவன தலைவர் அனில் அம்பானி.

நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர்கள் சந்திப்பில் பேசிய அனில் அம்பானி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ரூ.6000 கோடி கடனில் சிக்கியுள்ள அந்நிறுவனம், தனது சொத்துக்களை விற்று கடனை அடைக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு, இந்நிறுவனம் தனக்கு சொந்தமான மும்பை எனர்ஜி வணிகத்தை, அதானி குழுமத்திற்கு விற்பனை செய்து, அதன்மூலம் ரூ.18800 கோடியைத் திரட்டியது. அதன்மூலம், அந்நிறுவனத்தின் கடன் அளவு ரூ.7500 என்ற அளவிற்கு குறைந்தது.

இந்தாண்டு ஜனவரியில், டெல்லி – ஆக்ரா சுங்கச் சாலையை, ஒரு சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, இந்திய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அனுமதி பெற்றது அனில் அம்பானியின் நிறுவனம். இதன்மூலம் ரூ.3600 கோடி திரட்டப்பட்டது. இத்தகயை நடவடிக்கைகளின் மூலம், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்தக் கடனும், இந்த நிதியாண்டிற்குள் அடைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.