ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிரான அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு கோர்ட் தடை விதித்துள்ளது.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் எழுந்தது. அதன் எதிரொலியாக  துணை முதலமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
அவர் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். உங்கள் அனைவரையும் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்றும் அந்த நோட்டீசில் சபாநாயகர் கேட்டு இருந்தார்.
இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது சச்சின் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் வரும் வெள்ளி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணையும் வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.