சென்னை

கொரோனா பரவலை தவிர்க்க சமூக விலகள் மிகவும் இன்றியமையாதது. எனவே பொதுவெளியில் மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கு 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.  இதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பினை ஓரளவு ஈடு செய்வதற்காக தமிழக அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

அவ்வகையில் நிவாரண நிதியாக 1000 ரூபாயும்,  ரேஷன் நிவாரணப் பொருட்களும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. 

ரேஷன் கடைகளில் மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கும் நோக்குடன் வீடுகளுக்கே சென்று உதவித்தொகை வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

“அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் வீட்டிற்கே வந்து 1000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். மேலும் நிவாரணப் பொருள்களை பெறுவதற்கான டோக்கனும் அப்போதே அளிக்கப்படும்.

டோக்கனில் நிவாரணப் பொருள்களை பெறுவதற்கான நேரமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.  டோக்கன் பெற்ற அடுத்த நாளில்,  அதில்  குறிப்பிட்டுள்ள  நேரத்தில் சென்று நிவாரணப்  பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்” என அமைச்சர் காமராஜ்  தெரிவித்தார்.

அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்…