சென்னை :

கொரோனா வைரஸ் காரணமாக நீடித்துவரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த தொகையானது, கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு, தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்க முடிவு செய்திருப்பதோடு இந்த நிவாரண தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்துள்ளது.

வங்கி விவரங்களை அளிக்காத நடப்பில் உள்ள தொழிலாளர்கள் உடனடியாக  விவரங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண், வாங்கி கணக்கு புத்தகத்தின் தெளிவான முதல் பக்கம், நலவாரிய பதிவு எண், தாங்கள் சார்ந்த நலவாரியத்தின் அட்டையின் முதல் பக்கம் (கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நலவாரியம் ) ஆகியவற்றை வழங்க வேண்டும்.

இவற்றுடன், ஸ்மார்ட் கார்ட் எண், நியாயவிலைக் கடை எண் மற்றும் தற்போதய முகவரி ஆகியவற்றை மின்னஞ்சல் அல்லது வாட்சப் மூலம் தெரிவிக்குமாறு, தொழிலாளர் உதவி ஆணையர் சு.பா. சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை losssche@gmail.com அல்லது 7305280011 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் விவரங்களை அளித்துள்ள தொழிலாளர்கள் மீண்டும் அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.