மகாராஷ்டிர மாநிலத்தில் மதக்கூட்டங்கள் நடத்தத் தடை : முதல்வர் அறிவிப்பு

மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் மதக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நேற்று வரை 11596 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1.65 லட்சத்துக்கு மேல் குணம் அடைந்து சுமார் 1.24 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதையொட்டி இம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதில் மும்பை நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது  குறிப்பாக ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி பகுதியில் பாதிப்பு கடுமைஅயக இருந்தது.  இங்கு மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளால் பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது.  இதற்குச் சமீபத்தில் உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காணொளி காட்சி மூலம் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே கூட்டம் ஒன்றை நடத்தினார்.  அந்த கூட்டத்தில் அவர், “தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்தியது போல் மாநிலம் எங்கும் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்.   புதியதாக எந்த பகுதியிலும் அதிக பாதிப்பு ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிமை முகாம்கள் முழு வசதியுடன் அமைக்கபட வேண்டும்.   மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைக்கேற்ப படுக்கைகள் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

தற்போது பக்ரீத் மற்றும் விநாயக சதுர்த்தி வர உள்ளது.   இந்த கால கட்டத்தில் அதிகம் பேர் கூடுவதால் கொரோனா பரவுதல் அதிகரிக்கும்.  எனவே மாநிலம் முழுவதும் அனைத்து மதக் கூட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.   ஊரடங்கு என்பது அழுத்தம் தர அறிவிக்கப்படவில்லை.  மக்களின் நன்மைக்காக அறிவிக்கப்பட்டது என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.