டில்லி

சொந்த ஊருக்குச் செல்லாமல் இருக்கும் ஊரில் இருந்தே வாக்களிக்கும் முறை குறித்து விரைவில் சோதனை நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் இன்று தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி இன்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன.  அவ்வகையில் இன்று டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்கேற்று உரையாற்றினார்.  இந்நிகழ்வில் அவருடன் முன்னாள் துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

அப்போது சுனில் அரோரா, “அதி நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இனி ரிமோட் முறையில் வாக்களிப்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.,  இது நடைமுறையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.   வெளியூரில் உள்ள வாக்காளர்கள் இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க வேண்டி இருக்காது. தாங்கள் இருக்கும் ஊரில்  இருந்தே வாக்கு செலுத்த முடியும்.  விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னாள் தேர்தல் துணை ஆணையர் சந்தீப் சக்சேனா, “மக்களவை தேர்தல் நேரத்தில் சென்னை வாக்காளர் ஒருவர் டில்லியில் வசிக்கிறார் என வைத்துக் கொள்வோம்.  அவர் தனது வாக்கைச் செலுத்தச் சென்னைக்கு வர வேண்டாம்.  மாறாக டில்லியில் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று தனது சென்னை தொகுதியின் வாக்கை அங்கிருந்தே செலுத்தலாம்” என விளக்கம் அளித்துள்ளார்.