Random image

புழல் சிறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள் அகற்றம்: சிறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை:

மிழகத்தின் மிகப்பெரிய சிறையான புழல் சிறைச்சாலையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று சிறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ கைதிகளுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டடுள்ள கைதிகள் அங்கு சொகுசாக வாழ்ந்து வருவது சமீபத்தில் தெரிய வந்தது. அவர்கள் சிறையில் சுகபோகமாக வாழ்ந்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் கஞ்சா, சிகரெட் மற்றும் அனைத்து வகையான உணவுகள் கைதிகளுக்கு தாராளமாக கிடைப்பதாகவும், சிறையில் சிலரின் ஒத்துழைப்போடு செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தன.

இதையடுத்து, சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறை அதிகாரிகள், வார்டன்கள், கைதிகளிடமும் விசாரணை நடத்தினார். சிறைக்குள் சட்ட விரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள்  மற்றும் வானொலி பெட்டிகளும் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றத்தண்டனைக்காக சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகள் அங்கும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுகபோக வாழ்க்கைக்கு உதவிய சிறைத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதையும், இதற்கு யார் யார் உதவினார்கள் என்பதையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கைதிகளுக்கு உதவி செய்த சிறைக்காவலர்களும் குற்றவாளிகளே… அவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.