தளர்வுகள் நீக்கம் – கட்டுப்பாடுகள் தீவிரம்? மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு…

சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை நீக்கி, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த  இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தடுப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதையடுத்து, நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து, பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும்,  குறிப்பாக, பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், விதியை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க  ஒரு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும், தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முடிவுகளை மாவட்ட ஆட்சியர்களே எடுத்துக் கொள்ளலாம் என்றும், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்க அறிவுறுத்தி இருப்பதாகவும், மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை கடுமையாக்கவும், சில தளர்வுகளை நீக்கம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும்,  மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றார்கள். இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் மக்களிடையே உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமையில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.