ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ் நீக்கப்பட்டு, அதற்கு பதில் இந்தியில் பதிவிடப்பட்டு உள்ளது.

‘எனது ஆதார். எனது அடையாளம் – சாதாரண மனிதனின் அதிகாரம் ’ என்று கூறி ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், தற்போது எனது ஆதார், எனது அடையாளம் இந்தி என்பதை வலியுறுத்தும் வகையில், தனிமனிதனின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலும் மோடி அரசு அடாவடி செய்துள்ளது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதார் அடையாள அட்டை/ ஆதாரச்சான்று (Acknowledgement) என்று ஆதார் அட்டை திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது.  12 இலக்க அடையாள எண் தாங்கிய இந்த ஆதார் அட்டையே தற்போது அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதாரமாக திகழ்கிறது.  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2019 டிசம்பரில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் வாழும் 125 கோடி குடிமக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

 அனைவருக்கும் மிக முக்கியமான ஆதார் அட்டை  தற்போது,  குழந்தை பெறுவதில் இருந்து அனைத்து அரசு திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஆதார் அட்டை (Aadhaar) வேண்டியது அவசியம். இந்நிலையில், நீங்கள் ஆதார் அட்டை இல்லாமல் எந்த முக்கியமான வேலையும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு ஆதார் அட்டையின் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியை திணிக்கும் வகையில் நாடு முழுவதும் மும்மொழிக்கொள்கையை கொண்டுவந்துள்ள மோடி அரசு தற்போது, ஆதார் அட்டையிலும் தனது மொள்ளமாரித்தனத்தை காட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைக் கட்டாய மொழிப் பாடமாகக் கொண்டுவர வேண்டுமென மத்திய அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர், அது கைவிடப்பட்டது. அதே ஆண்டில், இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தி மொழியைக் கட்டாமாக்க மத்திய அரசு முயற்சிசெய்ய, அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் அதை முறியடித்தன.

கடந்த ஜூன் மாதம், இந்தியில் உரையாடிய ரயில்வே ஊழியர் கூறிய தகவலைத் தமிழ் பேசும் ஊழியர் ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாக, இரு ரயில்கள் ஒரே வழித்தடத்தில் வந்தன. பெரிய விபத்து நிகழாமல் தடுக்கப்பட்ட போதும், அனைத்து ரயில்வே ஊழியர்களும், ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே பேச வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது.  இதை நடைமுறைப்படுத்தவே மத்திய அரசு நடத்தும் ரயில்வே தேர்வுகளில் பிராந்திய மொழியான தமிழ் இடம்பெறாது என்றும் அறிவித்தது. அதற்கும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. இப்படி இந்தி கட்டாயம் ஆக்கப்படுவதும், தமிழகத்தின் எதிர்ப்பால் திரும்பப் பெறுவதும் மாறி மாறி நடந்துகொண்டே வருகிறது.

இந்த நிலையில், தற்போது ‘எனது ஆதார். எனது அடையாளம்’ என கூறப்பட்டுள்ள ஆதார் அட்டையிலும் இந்தியை திணித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள  ஆதார் அட்டையில் மாநில மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் இடம்பெற்றிருக்கும் . அதில், ஆதார் சாதாரண மனிதனின் அதிகாரம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் முகவரி அனைத்தும் ஆங்கிலம் மற்றும் தமிழில் இடம்பெற்றிருந்தது. 

ஆனால், தற்போது, ஆதார் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஆதார் ஆணையம் (UDAI) வழங்கியுள்ள திருத்தப்பட்ட அட்டையில் மாநில மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் அட்டையில் இடம் பெற்றிருந்த , ‘எனது ஆதார். எனது அடையாளம்’ ஆதார் சாதாரண மனிதனின் அதிகாரம் போன்ற வார்த்தைகள், தமிழுக்கு பதில்  இந்தியில் பதிவிடப்பட்டுள்ளது. 

மோடி அரசின் இதுபோன்ற குள்ளநரித்தனமான வேலைகள், தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியஅரசின் இந்த அருவருப்பான செயல் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கட்டுரையாளர்:  ATSPandian