அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” இதழாசிரியர் மருது. அழகுராஜ், அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க தற்போது மூன்று அணிகளாக  செயல்பட்டு வருகிறது. டில்லியில்   முகமிட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி, அணிகள் இணைப்பு  தொடர்பாக ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்தன. இன்று காலை பிரதமர் மோடியை ஓ.பி.எஸ். சந்தித்தார். அப்போதும் இணைப்பு குறித்து மோடி அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையே நேற்று, அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்து கவிதை  ஒன்று வெளியாகி உள்ளது.

“அடி, கழகத்தை அழி” என்ற தலைப்பில் சித்திரகுப்தன் என்ற பெயரில் வெளியாகி உள்ள அந்தகவிதையில் பாஜக  கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி. தினகரனுடன் மருது அழகுராஜ்

பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க பின்வழியாக ஆட்சியைப் பிடிப்பதாகவும், ஆளுநர்களை அரசியல் ஏஜென்ட்டுகளாக மாற்றியும், அமலாக்கப்பிரிவு, வருமானவரித் துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளைத் தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குழி தோண்டி புதைத்தவர்கள், உச்சநீதி மன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என்று அக்கிரமங்கள் நடத்தியவர்கள் என்று பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளது அக்கவிதை.  மேலும்,  மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததை, கருப்பு பணத்தை ஒழித்ததாகக் கதை விடுபவர்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

அதோடு, “ இவர்கள் செய்ததெல்லாம் அவர்களுக்கு ’சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி இன்னல் தந்ததும்தான்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இணையும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளிகியுள்ள நிலையில் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வெளிவந்த இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.

சர்ச்சைக்குரிய கவிதை

இந்த நிலையில், “தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் கட்டுரை மற்றும் கவிதைகள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து அந்நாளேட்டின் ஆசிரியர் கவிஞர் மருது. அழகுராஜ் நீக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் பொறுப்பில் இருந்து மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்” என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மதுரை மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன், “தற்போது  நமது எம்ஜிஆர் நாளேட்டின் பொறுப்பை உறவினர் விவேக் கவனித்து வருகிறார். அந்நாளேட்டில் கருப்பு ஆடுகளாக இருந்தவர்களை விவேக் நீக்கவிட்டார். மேலும் பாஜகவுக்கு எதிராக எழுதியவர்களையும் இன்னேரம் அவர் நீக்கியிருப்பார் என்று கருதுகிறேன். இந்த மேலூர் பொதுக் கூட்டம் எனக்கு வெற்றியைக் கொடுக்கும். சுயநலத்துக்காக மற்றவர்கள் சொல்லை கேட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அக்கவிதையை சித்திரகுப்தன் என்ற பெயரில் எழுதியதாக சொல்லப்படும் அந்நாளேட்டின் ஆசிரியர் மருது. அழகுராஜை தொடர்புகொண்டு கேட்டோம்.

அதற்கு அவர், “கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், அம்மா (ஜெயலலிதா)வினால் நமது எம்.ஜி.ஆர். ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இன்றுவரை அவர் காட்டிய வழியில் நடந்துவருகிறேன்.

கட்சியின் சட்டதிட்டங்கள், அரசியல் சூழல்ஆகியவற்றை உணர்ந்து ஆசிரியர் பணியை செய்துவருகிறேன்.

ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன் என்பது தவறான தகவல். வலைதளங்கள் பலமுறை  வாய்மையை கொலை செய்யும் கொலைக்களங்களாக இருப்பது வேதனைதான்.

என்னைப் பற்றி இப்படி தவறான தகவலை பரப்பி வருபவர்களுக்கு இதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

அதே நேரம் அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தகவல்.

நான் கவிஞன், பத்திரிகையாளன். என் பணியை செய்துவருகிறேன். மற்றபடி நான் அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல” என்று தெரிவித்தார்.