வெற்றியின் அளவுகோல் – வருமான வரி-4: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வெற்றியின் அளவுகோல் வருமான வரி!        4. சட்டம் என்ன சொல்லுது….?

‘என் வருமானம் இது. அதுக்கு இவ்வளவு வரி கட்ட வேண்டி வருது.

இதுல எதாவது குறைக்க முடியுமா…? நான் கேட்கறது,

சட்டப்படி.. எதுவும் விலக்கு அல்லது சலுகை இருக்கா…?’

நிச்சயமா இருக்கு. இரண்டு வழிகள்ல நமக்கு சலுகை கிடைக்கலாம்.

ஒண்ணு, நேரடியா வருமானத்துல இருந்தே கழிச்சுக்கிறது.

‘இந்த வருமானம், வர்றதுக்கு இன்னின்ன செலவுகள் செஞ்சுருக்கேன்…’ என்று

தக்க சான்றுகளுடன் பட்டியல் வைத்து இருந்தால், அந்தத் தொகையை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம்.

விரிவாக சட்டப் பிரிவுகளுடன் பிறகு பார்ப்போம்.

இப்போதைக்கு ஒரு எளிய உதாரணம்.

தன்னிடம் உள்ள பழைய கார் ஒன்றை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒருவர் விற்கிறார்.

ஆக, கார் விற்றதால் கிட்டிய வருமானம் – 1 லட்சம். ஆனால் இதற்கு முன்பாக பத்திரிகைகளில் இது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு இருந்தார்.

இதற்கான செலவு மட்டுமே 20,000 ரூபாய்.

இந்த நிலையில், வருமானத்தில் செலவு போக மீதம் உள்ள 80,000 ரூபாய் மட்டுமே வரிக்கு உள்ளாகும்.

முன்னர் சொன்ன 1 லட்சம் – மொத்த வருமானம். (Total Income)

செலவு போக எஞ்சிய 80,000 – வரிக்கு உடபட்ட வருமானம். (Taxable Income)

இதேபோல மிகப் பரவலான உதாரணம் – 80ஜி வரி விலக்கு.

வருமான வரித் துறையால் அங்கீகரிக்கப் பட்ட அறக்கட்டளை(Trust)க்கு அளிக்கிற நன்கொடைகளுக்கு வரி விலக்கு கிட்டும்.

இத்தகைய ஒரு ‘ட்ரஸ்ட்’டுக்கு ஒருவர் 10,000 ரூபாய் நன்கொடை தருகிறார். இதில் 50% வரை, வருமானத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம். அதாவது 5000 ரூபாய் அளவுக்கு மொத்த வருமானம் குறையும்.

கவனிக்கவும். மொத்தப் பணமான 10,000 ரூபாயும் வருமானத்தில் இருந்து செலவினமாகக் கழித்துக் கொள்ள முடியாது.

50% மட்டுமே பிரிவு 80ஜியின் கீழ் அனுமதிக்கப் படுகிறது. ஆனால், பிரிவு 35இன் கீழ் செய்யப் படும் நன்கொடைகளுக்கு 100% கழிவு கிடைக்கும்.

இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன…? அவசியம் நேரிட்டால், பிறகு இது குறித்துப் பார்ப்போம்.

சம்பளம், வீட்டு வாடகை, சொத்துகளை விற்றதால் கிடைத்த ஆதாயம், அல்லது வியாபாரத்தில் லாபம் என்று எந்த வகையில் வருமானம் வந்தாலும் அதனதன் கீழ் தனித் தனியே செலவுத் தொகைகளைக் கழித்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வியாபார இழப்பு (நஷ்டம்) தொகையையும் வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியும். ஆனால் அந்த ஆண்டுக்கான வருமான வரிப் படிவம் (Income Tax Return) குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (time limit) தாக்கல் செய்யப் பட்டு இருக்க வேண்டும்.

அதாவது எந்த ஆண்டில் இழப்பு ஏற்பட்டதோ அந்த இழப்பைக் காட்டி வருமான வரிப் படிவம் முறையாக சமர்ப்பிக்கப் பட்டு இருக்க வேண்டும். இழப்புதானே…? எதற்காக ‘ரிடர்ன்’ தாக்கல் செய்வது என்று இருந்து விட்டால்,

அடுத்த ஆண்டு லாபத்தில் இருந்து அந்த இழப்புத் தொகையைக் குறைத்துக் கொள்ள முடியாது. காலம் கடந்து தாக்கல் செய்து இருந்தாலும், அப்படித்தான்,  இழப்பை ஈடு செய்ய சட்டம் அனுமதிக்கவில்லை.

முழு வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டி வரும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ‘ரிடர்ன்’ தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் புரிகிறதா…?

அத்தியாயம் 6ஏ கழிவுகள் (Chapter VIA deductions) என்று சொல்லப் படும் இவை, வருமானம் அல்லது செலுத்த வேண்டிய வரியில் இருந்து விலக்கு பெறுபவை.

வருமான வரியில் இருந்து தள்ளுபடி செய்து கொள்ளவும் சட்டப்படி இடம் இருக்கிறது.

வரித் தள்ளுபடி (Tax Rebate), பொதுவாக வரி விலக்கு (exempt from tax), சில முதலீடுகளை சில குறிப்பிட்ட காலத்துக்கு மேலாகச் செய்யும் போது நமக்குக் கிடைக்கிறது.

பிரிவு 80இன் கீழ் வரும் இவ்வகை செலவுகள் பொதுவாக சேமிப்புப் பழக்கம் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தவை.

வங்கியில் கடனுதவு பெற்று வீடு வாங்கும் போது,

வங்கிக் கடன் மீதான வட்டித் தொகையைத் திருப்பிச் செலுத்தும் போது,

வரியில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.

வருமானத்தைக் கணக்கிடுதல், அதற்கான வரியில் இருந்து விலக்கு பெறுதல் போன்றவை எல்லாம் பல்வேறு பிரிவுகளுடன் சேர்ந்து புரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்.

இப்போதுதானே தொடங்கி இருக்கிறோம்…?

போகப் போக விரிவாகப் பார்ப்போம்.

இப்போதைக்கு, வருமானம், வரியில் இருந்தி சில கழிவுகள், தள்ளுபடிகளை சட்டம் வழங்கி உள்ளது என்பதை மட்டும் மனதில் கொண்டால் போதுமானது.

வருமான வரி ‘ரிடர்ன்’ தாக்கல் செய்வது பற்றி நிறைய செய்திகள் பார்த்து, கேட்டு இருக்கிறோம்.

‘ரிடர்ன்’ என்றால் என்ன….? அதில் என்னவெல்லாம் கேட்கப் பட்டு இருக்கும்….?

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published.