திரைவிமர்சனம்: கே.ஜி.எஃப்.

பொதுவாக கன்னடப்படங்கள் என்றாலே தரத்தில் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது என்கிற கருத்தை மாற்றி வருகின்றன சமீப காலத்து கன்னடப்படங்கள். அந்த வரிசையில் பிரம்மாண்டமாகவும் வந்து அதிர வைத்திருக்கிறது கே.ஜி.எப்.

முதலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விசயம், கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்று சொல்ல முடியாதபடி நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள்.

கடந்த 2014ம் வருடம்  வெளியான “உக்ரம்” கன்னடப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது.

மிகப்பெரிய பிராஜக்ட். கடந்த 2016ம்  வருடம் துவங்கப்பட்ட இந்தப் படம் பலரது இரண்டு  ஆண்டு உழைப்பில் இப்போது வெளியாகி இருக்கிறது. முன்பாதி மும்பை நகரத்தையும் பின்பாதி கே.ஜி.எப்.  (கோலார்) தங்கச் சுரங்கத்தையும் களமாக கொண்டு நகருகிறது கதை.

 

 

 

துவக்கத்தில் தாதாக்களின் மோதல் என்றுதான் கதை துவங்குகிறது. ஆனால் போகப்போக.. இதுவரை யாரும் சொல்லாத கோலார் தங்கச் சுரங்க தொழிலாளர்களின் பட்ட துயரத்தை, கொடுமையை ரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கிறது.

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து அனாதை ஆனவர் யாஷ். சிறுவனாக அவர், பிழைப்பு தேடி மும்பை நகருக்குச் செல்கிறார். அங்கு ஷு பாலீஷ் போடும் வேலை கிடைக்கிறது. பிறகு படிப்படியாக மும்பையில் ஒரு தாதாவாகிறார். சில டான்கள் அவரை கேஜிஎப்-ல் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தின் அதிபரை கொலை செய்யும் அசைண்மெண்ட் கொடுக்கிறார்கள்.

இதனால்ய .யாஷ், அங்கிருக்கும் 20 ஆயிரம்  அடிமைகளில் ஒருவராக சுரங்கத்துக்குள் நுழைகிறார்.  தான் திட்டமிட்டபடி சுரங்க முதலாளியைக் கொல்கிறாரா என்பதுதான் மீதிக்கதை.

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து கன்னட திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் யாஷூக்கு இந்தப்படம் மேலும் ஒரு மைல் கல்.

இறுகிய முகமும், முறுக்கிய உடலுமாக ஒரு தாதாவை கண்முன் நிறுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் தெறிக்கவிட்டிருக்கிறார். இதுபோன்ற சண்டைக்காட்சிகள் தமிழில்கூட வந்ததில்லை என்றே சொல்லலாம்.

லாஜிக் இல்லை என்றாலும் ஒரே நேரத்தில் அவர் ஐம்பது நூறு பேரை அடித்து துவம்சம் செய்வதை ஏற்றுக்கொள்ளும்படி நடித்திருக்கிறார். ஆனாலும் இத்தனை சண்டைக்காட்சிகள் தேவையா என்று தோன்றுகிறது.

படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி. போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையின் நடுவே தோழிகளுடன் பீர் குடிக்கும் அடாவடிப்பெண்ணாக அறிமுகமாகிறார். அவரைப் பார்த்தவுடன் யாஷ் காதல்வயப்படுகிறார். ஆரம்பத்தில் அடாவடிப்பெண்ணாக இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி, பிறகு.. ஆம்… அவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஆனால் விருந்தில் ஊறுகாயும் இருக்க வேண்டும் என்பது போல அவரையும் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். அவர் வரும் காட்சிகளை ஒரு கை விரல்களில் எண்ணிவிடலாம்.

வழக்கமான தாதா படங்கள் போலவே வில்லன்கள் உர் என்று முகத்தைவைத்துக்கொண்டு திட்டம்போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது அடியாட்கள், நாயகனிடம் அடிவாங்கிச் சாகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் புவன் கௌடா பிரமிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கோலார் தங்கச்சுரங்கத்தை பறவைப்பார்வையில் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் ரவி பர்சுர். பாடல்கள் பரவாயில்லை ரகம்.

படத்தின் கதையே, அனந்த்நாக் ஒரு டிவி பேட்டியில் கூறுவது போல அமைத்திருக்கும் யுக்தி ரசிக்கவைக்கிறது.

என்னதான் தாதா கதை என்றாலும் இவ்வளவு வன்முறை, ரத்தமா? கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மற்றபடி பிரமிக்கவைக்கும் படம்.

கார்ட்டூன் கேலரி