கழற்றிப்போட்ட கோமணம் செந்தில்பாலாஜி!: டி.டி.வி. தினகரன் அதிர்ச்சி பேச்சு

னது கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, கழற்றிப்போட்ட கோமணம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகர் விமர்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் கரூர் செந்தில்பாலாஜி விலகி இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தினகரன்

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் தெரிவித்ததாவது:

“தம்பி செந்தல் பாலாஜியை கடந்த 2006ம் வருடத்தில் இருந்து எனக்கு நன்றாக தெரியும். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட கரூரில் இருந்து பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்களைப் பற்றி விசாரித்துச் சொல்லுமாறு அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னிடம் கேட்டுக்கொண்டார்.

விண்ணப்பித்திருந்த அனைவரைப் பற்றியும் நான் விசாரித்தேன்.  அப்போது செந்தில்பாலாஜி மாணவர் அணி மா.செ.வாக இருந்தார். அவரைப் பற்றியும் பலரிடம் விசாரித்தேன். துறுதுறுப்பாக செயல்படுபவர் என்றார்கள். ஆகவே நான் தேர்ந்தெடுத்த இரண்டு மூன்று பேரில் செந்தில் பாலாஜியும் இருந்தார்.

அடுத்து ஜெயலலிதா என்னை ஒதுக்கிவைத்தார். நான் அரசியலிலேயே இல்லை. பிறகு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்தது உங்களுக்குத் தெரியும். செந்தில்பாலாஜி எங்களோடு வந்தார்.

இங்கே நன்றாகத்தான் இருந்தார். சிறப்பாகத்தான் செயல்பட்டார். நான்கு மாதங்களுக்கு முன் தனக்கு சொந்த பிரச்சினை இருப்பதால் சில காலத்துக்கு தன்னால் சிறப்பாக செயல்பட முடியாது என்றார். நானும் சரி என்றேன்.  அதே நேரம் சமீபத்தில் வீசிய கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனது மாவட்டத்தில் இருந்து பொருட்கள் அனுப்பி வைத்தார்.

ஆனால் கொஞ்சம் ஒதுங்கித்தான் இருந்தார். டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சிக்கும் வரவில்லை. நான் சிலரிடம் விசாரித்தேன்.  ஏதோ வழக்கு விசயமாக பிஸியா இருக்கிறதா சொன்னார்கள்.

இப்போது சில நாட்களுக்கு என் கட்சியினர் சிலர் அவர் பேசுவதே சரியில்லை என்றார்கள். பிறகு அவர் திமுகவில் சேரப்போவதாக தகவல் வந்தது. தற்போது சேர்ந்திருக்கிறார்.

அது குறித்து நான் வருத்தப்படவில்லை. அவர் நல்ல தம்பிதான். ஆனால் யாரையும் பிடித்துவைக்க முடியாது.  எங்கிருந்தாலும் வாழ்க.

மற்றபடி, “அமமுக கூடாரமே காலியாகிவிட்டது. ம.தி.மு.க., தே.மு.தி.க. போல ஆகிவிட்டது” என்று சிலர் சொல்வதெல்லாம் தவறு. யாரோ சிலர் கட்சியைவிட்டுப் போவதால் ஒரு மக்கள் இயக்கம் அழிந்துவிடும் என்பது கிடையாது.  திமுகவை எதிர்த்து துவக்கப்பட்டமதிமுக மீண்டும் திமுகவுடன் கூட்டணிவைத்தது. தான் ஒரு மாற்று என்று வந்த தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இதனால் அந்த கட்சிகள் நீர்த்துப்போய்விட்டன. அதுபோல அரசியல் நடவடிக்கையால் ஒரு இயக்கம் நீர்த்துப்போகலாம். மற்றபடி ஓரிருவர் கட்சியை விட்டு விலகுவதால் எந்த இழப்பும் இல்லை.

எங்கள் கட்சியில் இருந்து ஒரு நிர்வாகியை எடுத்து அதை பெரிய விழாவாக கொண்டாடுவதில் இருந்து திமுக எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது தெரிகிறது.

ஸ்டாலின் – செந்தில் பாலாஜி

ஆர்.கே.நகரில் என் பெயரிலேயே சில வேட்பாளர்களை திமுக நிறுத்திப் பார்த்தது. ஆனாலும் என் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.  அக்கட்சிக்குதான் டெபாசிட் போனது. அதிலேருந்து எங்கள் கட்சியை ஏதாவது செய்யணு வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார்கள். அவ்வளவுதான்” என்று பேசய தினகரன், தொடர்ந்து பேசும்போது, “1999ம் வருட பாராளுமன்ற தேர்தலில் நான் அ.தி.மு.க. சார்பில் பெரியகுளம் வேட்பாளராக போட்டியிட்டேன். என்னை எதிர்த்து நின்றது எங்கள் கட்சியில் இருந்து சென்ற செல்வேந்திரன். அவர் பிரச்சாரக்கூட்டத்தில், “தினகரன் பட்டுத்துணி. அதை சட்டையாக சட்டையாக போட்டால் உடலை உறுத்தும் நான் பருத்தித்துணி. என்னை சட்டையாக தைத்துப்போட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். ஆகவே எனக்கே ஓட்டுப்போடுங்கள்” என்றார்.

பிறகு என்னை அறிமுகப்படுத்தும் பிரச்சாரக்கூட்டத்தில் காளிமுத்து பேசும்போது, “தினகரனை பட்டுத்துணி என்று சொல்கிறீர்கள். ஆனால் நாங்கள் கழட்டிப்போட்ட கோமணத்துணியைத்தான் திமுக வேட்பாளராக்கி இருக்கிறது” என்றார்.

நன்றாக கவனியுங்கள். நான் சொல்லவில்லை. தமிழில் புலமை வாய்ந்த சொல்லின் செல்வர் அண்ணன் காளிமுத்துதான் கூறினார்.

தற்போது இதைத்தவிர தி.முக.வுக்கு வேறு பதில் இல்லை. இதுதான் இப்போதைக்கு  பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

“தினகரன் இந்த உதாரணத்தைச் சொல்வது தேவைதானா? தவிர, அதே காளிமுத்து இப்போதும் தினகரன் தலைவியாக கொண்டாடும் ஜெயலலிதாவையும் பல முறை தரம்தாழ்ந்து பேசியிருக்கிறாரே..! அதுபற்றி தினகரன் என்ன நினைக்கிறார்” என்று  அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.