டில்லி

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி என் 370 நீக்கம்  அரசின் தன்னிச்சையான முடிவு என ஷேக் அப்துல்லாவின் பேத்தி நைலா அலி கான் கூறி உள்ளார்.

மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ நீக்கம் செய்ததற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் மாநிலத்தின் மிக முக்கிய தலைவர்களில் மறைந்த ஷேக் அப்துல்லாவும் ஒருவர் ஆவார். இவருடைய கடைசி மகளான சுரையா அப்துல்லாவின் மகள் நைலா அலி கான் அமெரிக்காவில் கல்வி கற்றுப் பனி புரிபவர் ஆவார்.

இவருடைய பெற்றோர்கள் ஸ்ரீநகரில் வசித்து வருகின்றனர். நைலாவின் தாய் சுரையா ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் தந்தை ஒரு ஓய்வு பெற்ற மருத்துவர்  ஆவார். இவர ஜூலை மாதம் இந்தியா வந்துள்ளார். இந்த மாதம் நான்காம் தேதி அன்று நைலா தனது பெற்றோர்களுடன் பேச முயன்று காஷ்மீர் பகுதியில் தொலைத் தொடர்பு முடக்கப்பட்டதால் பேச முடியாமல் இருந்துள்ளார்.

நைலா காஷ்மீர் விவகாரம் குறித்து. “என்னைப் பொறுத்த வரையில் ஜனநாயகம் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதில் மட்டும் அடங்கி விடவில்லை. ஆனால் அது மக்களின் விருப்பப்படி அரசு நடப்பது என்பதில் உள்ளது. பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிறுபான்மையினரை மதித்து நடப்பதே உண்மையான மக்கள் ஆட்சி ஆகும். அவர்களுடைய உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை ஆகும்.

ஆனால் தற்போதைய மத்திய அரசு இந்த குடியரசுக் கொள்கைகளைக் கவனத்தில் கொள்வது இல்லை. இதனால் சிறுபான்மையோர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாததாக உணர்கின்றனர். தற்போது காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 நீக்கம் செய்தது குறித்து அரசு மாநிலம் வாழ் மக்களின் கருத்துக்களைக் கேட்கவில்லை. இது அரசு எடுத்த தன்னிச்சையான முடிவு ஆகும். இந்த முடிவுக்கு  பெரும்பாலான காஷ்மீர் மக்கள் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.