சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘வாடகை ஸ்கூட்டர்’ சேவை தொடக்கம்!

சென்னை:

யணிகளின் வசதிக்காக சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாடகை ‘ஸ்கூட்டர்’ சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனம் உதவி யுடன் இந்த திட்டம் 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் முக்கிய பகுதிகளுக்கு தற்போது மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. ஏராளமான பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை உபயோகப்படுத்தி வருகின்றனர். பயணி களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கனவே வேன் வசதி ஏற்பாடு செய்துள்ள நிலையில், தற்போது வாடகை ஸ்கூட்டர் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

மெட்ரோ ரயிலின் முக்கிய ஸ்டேஷன்களான  அண்ணா நகா் டவா், வடபழனி, கிண்டி,  ஆலந்தூா் ஆகிய 4 இடங்களில் முதல் கட்டமாக  வாடகை மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக தனியார் நிறுவனமான வோகோ ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதன்படி  மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகைக்கு மின்சார பைக்குகளை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வாடகை ஸ்கூட்டர் சேவையை பயன்படுத்த விரும்பும் நபர்கள், முதலில், அதற்கான மொபைல் செயலியை  ‘வோகா ஆப்’ தங்களது மொபைல் போனில் டவுன்லோடு செய்து, அதில் கேட்கப்படும் விபரங்கள் உள்பட டிரைவிங் லைசென்ஸ் டிடெய்லையும்  உள்ளீடு செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன்பிறகு நமக்கு வரும் ‘பின்’ எண் மூலம், நாம் வாடகை ஸ்கூட்டரை எடுத்து பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தின்படி, வாடகை ஸ்கூட்டர் உபயோகப்படுத்த நிமிடம் ஒன்றுக்கு ரூ.1.20 (ஒரு ரூபாய் 20 பைசா) வாடகை செலுத்த வேண்டும்.

இந்த திட்டம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால், விரைவில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.