திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ‘புல்லட்’ வகை இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நடைமுறை தெற்கு ரயில்வேயின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் மற்றும் பேருந்து கூட்டத்தில் அலைமோதும் பக்தர்களின் வசதிக்காக இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொச்சியிலுள்ள இருசக்கர வாகன வாடகைக்கு விடும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, ராயல் என்ஃபீல்டு ரக இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படும்.

வாடகை கட்டணமாக, நாள் ஒன்றுக்கு ரூ.1200 (குறைந்தபட்சம் 200 கி.மீ) கட்டணமாக வசூலிக்கப்படும். அடுத்து, அதிகரிக்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கூடுதலாக ரூ.100 கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக செங்கனூர் ரயில் நிலையத்தில் துவக்கப்பட்ட இத்திட்டம், தற்போது மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.