வாடகை வீட்டுக்கு பூட்டு.. கலெக்டருக்கு வந்த கண்ணீர் மனு ..

ரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மராஜ்-லோகேஷ்வரி தம்பதியினர். இவர்கள் நேற்று தங்கள் குழந்தை களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து மக்கள் குறை தீர்க்கும் நாளன்று ஒரு மனுவை அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளனர்.

அமமனுவில், “நாங்கள் தாந்தோணிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இந்த கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் குடும்பத்துடன் எங்கள் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தோம். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின் கடந்த 16-ந்தேதி எங்கள் வீட்டிற்கு திரும்பினோம். ஆனால் அப.போது எங்கள் வீட்டு உரிமையாளர் வாடகை பாக்கியை செலுத்தினால் தான் வீட்டிற்குள் வரவேண்டும் என வீட்டின் சாவியை தர மறுத்து விட்டார். எனவே வாடகை செலுத்த இரண்டு மாதம் அவகாசம் அளிப்பதுடன், வீட்டு உரிமையாளரிடமிருந்து சாவியையும் மீட்டு தரவேண்டும். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கூறியிருந்தனர்.

வீட்டு உரிமையாளர் வீட்டிற்குள் அனுமதிக்காததால், கடந்த ஒரு வாரமாக குழந்தைகளுடன் அம்மா உணவகம் உள்ளிட்ட சில இடங்களில் சாப்பிட்டு விட்டு, உறவினர்கள் வீட்டில் தங்கி வருவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

-லெட்சுமி பிரியா