ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பா? தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு
தூத்துக்குடி:
தமிழக அரசால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே பணி புரிந்தவர்களை மீண்டும் வேலைக்கு வரச்சொல்லி ஸ்டெர்லைட் நிர்வாகம் அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஸ்டெர்லைக்கு எதிரான மக்கள் போராட்டம் காரணமாக, மக்கள் மீது காவல்துறை துப்பாக்கி நடத்தி, 13 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்து, ஆலைக்கு சீலும் வைக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆலையில் பணியாற்றி வந்த ஒப்பந்ததாரர்களை ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் மறைமுமாக தூண்டி விட்டு, அவர்கள் ஆலையை திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதன் காரணமாக, ஏற்கனவ ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி, அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க தனி இணையதளத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி, வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில்,‘ ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களை இன்று உடனே பணிக்கு திரும்புமாறு ஆலை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. ஆலையில் வந்து ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யவும் நிர்வாகத்தினர் அறிவுறித்தி உள்ளனர். ஆலையில் இருந்து வாகனங்கள் மூலமாக ஊழியர்களை அழைத்துவரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல ஊழியர்கள் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு வருகை தந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மூலம், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று ஆலையை திறக்க வலியுறுத்தி மனு கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களை அழைத்து, அவர்கள் மூலம் ஆலையை திறக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சி எடுத்து வருவது அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு ஆலையை திறக்க முடியாது என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் அறிவித்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், ஆலையினுள் ஒப்பந்த தொழிலாளர்களை அனுமதித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உடடினயாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.