பம்பா:

பரிமலை அய்யப்பன் கோவில் தற்போது வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த நிலையில், பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக  திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக கோவில் வளாகத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்  அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து பல பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்வதும், அவர்களை திருப்பி அனுப்புவதும் நடைபெற்று வருகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், பல போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில், தற்போது  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 15ந்தேதி அன்று  வைகாசி மாத பூஜைகளுக்காக மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.  கோவில்  தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்தார்.

5 நாட்கள் நடை திறந்திருக்கும் நிலையில், தினசரி  கணபதி ஹோமம், உஷபூஜை, வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 5 நாட்களிலும் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை நெய்யபிஷேகம்  நடக்கிறது. வரும் 19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. அத்துடன் வைகாசி மாத பூஜைகள் நிறைவுபெறும்.

இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நுழைய முயற்சி செய்த விவரம் தெரிய வந்ததுள்ளது.  ஆனால் இதைக்கண்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவர்கள் கோவிலுக்குள் நுழைய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பினர்.

இதன் காரணமாக   அங்கு மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.