திருவள்ளுர், கடலூர், தர்மபுரி தொகுதியை சேர்ந்த 10வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு? தேர்தல் ஆணையர்

சென்னை:

திருவள்ளுர், கடலூர், தர்மபுரி தொகுதியை சேர்ந்த 10வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?  நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 18ந்தேதி 38 நாடாளுமன்ற தொகுதி உள்பட 18சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சில வாக்குசாவடிகளில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு செய்ய அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று  செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ , தமிழகத்தில் பிரச்சினை எழுந்துள்ள 10 வாக்குச்சாவடிகளில்  மறு வாக்கு பதிவு நடத்துவது குறித்த அறிக்கை இன்று மாலை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

இதுதொடர்பாக  திருவள்ளூர், கடலூர் மற்றும் தருமபுரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பரிசீலித்து மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று அவர் கூறினார்.

அதே வேளையில், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அங்கு வாக்குப்பதிவு நடந்த இடத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக 4 ஆயிரத்து 690 வழக்குகளும், சுவர் விளம்பரங்கள் செய்ததாக 3 ஆயிரத்து 732 வழக்குகளும்,பண பட்டுவாடா செய்ததாக 565 வழக்குகளும்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், அதிமுக, திமுக உள்பட  பலஅரசியல் கட்சிகள் மீதும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed