குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார் நியூஸ்7 தமிழ் நிருபர்

தீவிர சிகிச்சையில் நிருபர் உதயா
தீவிர சிகிச்சையில் நிருபர் உதயா

 இட ஆக்கிரமிப்பு  மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் செய்தி சேகரிக்க சென்ற  நியூஸ்7 தொலைக்காட்சியின் சென்னை தாம்பரம் செய்தியாளர் குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திற்கு சொந்தமான தகவல்தொழில்நுட்ப பூங்காவின் பின்புறம் உள்ள மலையடிவாரப் பகுதியில்  முறைகேடாக மணல் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம், மணல் கடத்தப்படுவதாக  அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக  நியூஸ் 7 தொலைக்காட்சியின்  தாம்பரம் செய்தியாளர் உதயா சம்பவ இடத்திற்கு சென்றார்.  அப்போது ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் முத்தமிழ் மணி உள்ளிட்டோர், செய்தியாளர் உதயா உள்ளிட்டோரை அங்கிருந்து சென்றுவிடும்படி கடுமையாக மிரட்டினர்.  மேலும் 30க்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்து கொண்டு கொடூரமாக தாக்கினர்.

 தகவலறிந்து வந்த போலீசார், குண்டர்களிடம் இருந்து செய்தியாளர் உதயாவை மீட்டு, முடிச்சூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.   படுகாயமடைந்த உதயாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

செய்தியாளரை தாக்கிய ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் முத்தமிழ் மணி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது