ஆளுமை மேம்பாட்டு பேச்சாளரா சக்திகாந்த தாஸ்? – குவிந்த கண்டனங்கள்

சென்னை: இந்தியப் பொருளாதாரம் குறித்து மக்களின் மனநிலைதான் தவறாக உள்ளது என்று கருத்துக் கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மீது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மோசமான மந்தநிலையை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம் குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசிய பேச்சுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் குறித்து மக்களின் மனநிலை மிகவும் சோர்வானதாகவும், விதியை நொந்ததாகவும் உள்ளது என்று கூறிய சக்திகாந்த தாஸ், பொருளாதாரம் குறித்த நேர்மறை சிந்தனை அவசியம் என்று பொருள்படும்படி கருத்துக் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவது முக்கியம். அதைவிடுத்து ஆளுமை மேம்பாட்டு பேச்சாளரைப் போன்று பேசிக்கொண்டிருக்கக்கூடாது. மாபெரும் சரிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கை எடுப்பதே இப்போதைய தேவை.

இப்படியான ஆளுமை மேம்பாட்டு மேடைப் பேச்சல்ல. இப்படி பேசுவதற்காக, ஒரு உயர்ந்த அரசியல் சாசன பதவியில் அமர்ந்திருக்க வேண்டிய தேவையில்லை என்று சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிந்துள்ளன.

இந்திய வரலாற்றின் மோசமான பொருளாதார நடவடிக்கையான பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னாலிருந்தவர் இவர் என்ற முக்கியமான குற்றச்சாட்டு உள்ளது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

கார்ட்டூன் கேலரி