குடியரசு தினம்: பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு

புதுடெல்லி:

ரும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

போரிஸ் ஜான்சனை பிரதமா் மோடி கடந்த 27-ஆம் தேதி தொலைபேசியில் தொடா்பு கொண்டு கலந்துரையாடினாா். அப்போது, வா்த்தகம், முதலீடு, உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவம், பருவநிலை மாற்றம், கரோனா தொற்றை எதிா்கொள்வதில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இருவரும் ஒப்புக்கொண்டனா்.

வரும் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தின விழாவுக்கு வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். பதிலுக்கு, பிரிட்டனில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டுக்கு வருமாறு பிரதமா் மோடிக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கு முன்பு, கடந்த 1993-ஆம் ஆண்டின் இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போதைய பிரிட்டன் பிரதமா் ஜான் மேஜா் பங்கேற்றாா்.