மும்பை:  விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.

இந்த நிலையில், பிரபல தொழிலதிபரான ராஜீவ் பஜாஜ், “சமுதாயத்தில் நச்சுத்தன்மையின் ஆதாரமாக ரிபப்ளிக் டிவி உள்பட  3 சேனல்களை  மும்பை போலீஸ் தடுப்புப்பட்டியலில் பட்டியலிட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.

ஒரு தொலைக்காட்சியின் தரத்தை நிர்ணயிப்பது டிஆர்பி ரேட்டிங். இதனை வைத்துதான் முன்னனி தொலைக்காட்சி எது என்பது விளம்பரதாரர்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.  அந்த சேனல்களுக்கு விளம்பரங்கள் வாரி வழங்கப்படுகின்றன.  டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு, கோடிக்கணக்கில் கல்லாகட்டியும் வருகின்றன.  இதற்காக பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை, குறிப்பாக, மக்களிடையே பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பி மக்களிடையே, தங்களது டிஆர்பி ரேட்டிங்கை வளர்த்து வருகின்றன.

ஆனால், டிஆர்பி ரேட்டிங் 100 % துல்லியமானதா? என்பது கேள்விக்குறியான விஷயம். அதுவும், தற்போது பெரும்பாலான வீடுகளில் டிஸ்டிவி, செட்டாப் பாக்ஸ், கேபிள் டிவி என பல முறைகளில் டிவி சேனல்கள் பார்க்கப்படுவதால்,   TRP ரேட்டிங் துல்லியமானதாக இருக்க வாய்ப்பே இல்லை என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இருந்தாலும், ஊடகங்கள் டிஆர்பி ரேட்டையே முக்கிய தொழில் யுக்தியாக கையாண்டு வருகிறது. 

இதற்காக பல்வேறு தகிடுத்தத்தங்களை, சேனல் நிர்வாகங்கள்  அரங்கேற்றி வரகின்றன. அதற்கான  கருவி பொருத்தப்பட்டுள்ள வீடுகளில், குறிப்பிட்ட சேனலை பார்ப்பதற்காக, அவர்களுக்கு கையூட்டு வழங்கப்படுவதும், சில சீரியல்களை பார்க்க வலியுறுத்துவதும், அதற்கான ஏஜன்சிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அதுபோல குற்றச்சாட்டில்தான் தற்போது அர்னாப் கோஷ்வாமியின் ரிப்ப்ளிக் டிவி சேனல் சிக்கி உள்ளது. சில சேனலை சேர்ந்தவர்கள் கண்டறிந்து தங்களது சேனலை பார்க்க பணம் கொடுப்பதும் நடந்தேறி வருகிறது. இதனாலும் இதன் மீதான நம்பிக்கை குறைத்தே மதிப்பிடப்படுகிறது.

விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  இவர்களில் ஒருவர் வீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.  வீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸில் அதிகம் மக்கள் தங்கள் சேனலை பார்ப்பது போல் காட்டி டிஆர்பி மோசடியை அரங்கேற்றியதாக ரிபப்ளிக் டிவி மற்றும் இரண்டு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் செட்அப் பாக்ஸில் தில்லுமுல்லு செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங்  தெரிவித்து உள்ளார்.

டிஆர்பிக்காக ஊடக நிறுவனங்கள் தங்கள் சேனலை எல்லா நேரத்திலும் ஆன் செய்தே வைத்திருக்க வேண்டும் என்று வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்ததும், அதுதொடர்பாக விசாரணையின்போது,  ஆங்கிலம் பேசாத ஏழை படிக்காத குடும்பங்கள் ஆங்கில தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கிறது. தங்கள் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக டிவியை ஆன் செய்து வைக்கும் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் 400-500 ரூபாய் வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம்,  போலியாக அதிகரித்து காட்டியதன் மூலமே டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் ரிபப்ளிக் டிவி வந்திருப்பதாகவும், இந்த மோசடி தொடர்பாக இன்று அல்லது நாளை ரிபப்ளிக் டிவி நிறுவனத்தார் விசாணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், தற்போது,  ஃபக் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா என்ற இரண்டு சேனல்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலிவுட் “நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான விசாரணையின்போது,  ரிபப்ளிக் டிஆர்பி காட்டுவதற்காக இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபணமானால், சேனல் நிர்வாகத்தின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள், கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் சூசகமாக தெரிவித்து உள்ளார்.

போலி டிஆர்பி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள பிரபல தொழில்அதிபர் ராஜீவ் பஜாஜ்,  சமுதாயத்தில் நச்சுத்தன்மையின் ஆதாரமாக ரிபப்ளிக் டிவி போன்ற சேனல்கள் இருப்பதாகவும், தற்போது மும்பை காவல்துறையினரால்,  3 சேனல்களை தடுப்புப்பட்டியலில் பட்டியலிட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியவர், இதுபோன்ற முறைகேடான செயல்கள்,  சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு, நம் சமூகத்தில் நச்சுத்தன்மையின் ஒரு ஆதாரமாக நாம் உணர்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  நாங்கள்  அனைவரும் வலுவான பிராண்டை உருவாக்கும் தொழிலில் இருக்கிறோம், ஒரு வலுவான பிராண்ட் என்பது நீங்கள் ஒரு வலுவான வணிகத்தை உருவாக்கும் அடித்தளமாகும். எல்லோரும் ஒப்புக்கொள்வது போல் ஒரே நாளின் முடிவில் கிடைத்து விடாது,  ஒரு வலுவான திடமான வணிகத்தின் நோக்கம் வணிகத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் பெருமளவில் பங்களிப்பதாகும்.

எங்களது பஜாஜ் நிறுவனத்தில், சில காலமாக தடுப்புப்பட்டியலில் மூன்று சேனல்கள் உள்ளன, சில காலத்திற்கு முன்பு நான் எனது சந்தைப்படுத்தல் தலைவரை அழைத்தபோது ஆச்சரியப்பட்டேன், என் சக ஊழியர் என்னிடம் ‘ நான் இதை ஒன்பது மாதங்களுக்கு முன்பு செய்தேன் ’ என்று கூறினார். அதனால் அது எனக்கு மிகவும் உந்துதலாக இருந்தது. ” அதுபோன்ற செயல்கள் சரியல்ல என்று உணர்ந்து, அந்த சேனல்களை தடுப்பு பட்டியலில் வைத்த்துள்ளேன்.

இவ்வாறு ராஜீவ் பஜாஜ் கருத்து தெரிவித்து உள்ளார்.

இந்தி சேனல்களில் முதன்மையாக இருந்து வந்த ஆஜ்தக் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கை குறைக்கும் வகையில், ரிபப்ளிக் டிவி டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததும்,  சமீபத்தில் டிஆர்பி பந்தயத்தில் முதலிடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மும்பை காவல்ஆணையரின் பேட்டிக்கு மறுப்பு தெரிவித்துள்ள  ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி,  “சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு விசாரணையில் விசாரித்தோம் என்பதற்காக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் ரிபப்ளிக் டிவிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்காக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் மீது ரிபப்ளிக் டிவி சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் பரம் பிர் சிங்கின் விசாரணை மூடு மந்திரமாக இருந்தது. எனவே இப்போதைய நடவடிக்கை என்பது பால்கர் வழக்கு, சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு அல்லது வேறு ஏதேனும் வழக்கு குறித்து ரிபப்ளிக் டிவி அம்பலப்படுத்திய விசாரணை அறிக்கைகள் காரணமாக எடுக்கப்பட்ட அவநம்பிக்கையான நடவடிக்கையாகும். இது, உண்மையை இன்னும் ஆழமாக தெரிவிக்க வேண்டும் என்று ரிபப்ளிக் டிவியில் பணியாற்றும் அனைவரின் தீர்மானங்களையும் பலப்படுத்துகிறது. எந்தவொரு புகாரிலும் பார்க் ரிபப்ளிக் டிவியை பற்றி குறிப்பிடவில்லை என்பதால், பரம் பிர் சிங்  அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் எங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.