ரிபப்ளிக் டிவியே சொல்லிவிட்டது – ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதானாம்..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

ஏனெனில், அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி, மோடி ஆதரவு தொலைக்காட்சி என்ற பெயரை வெளிப்படையாக பெற்ற ஊடகம் என்பது நடுநிலையாளர்களின் கருத்து.

ஏற்கனவே இந்தியா டுடே மற்றும் கைலாஷ் நியூஸ் போன்ற ஊடகங்களின் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கே சாதகமாக இருந்தன. தற்போது ரிபப்ளிக் டிவியும் அதை உறுதிபடுத்தியுள்ளது.

அந்த ஊடகத்தின் கணிப்பின்படி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 23-28 இடங்களும், காங்கிரசுக்கு 10-15 இடங்களும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.
மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 41 உறுப்பினர்களின் பலம் தேவை.

ஜார்க்கண்ட் தேர்தலில் நாட்டின் தற்போது நிலவும் மோசமான சூழல்களை முன்னிறுத்தி ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசின் முன்னணி தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.