டில்லி

ந்தியாவில் சீனாவின் 59 செயலிகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய அரசு கடந்த திங்கள்கிழமை அன்று சீனாவின் டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது.  இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு எதிராக இருப்பதாகக் கூறப்பட்டது.   எல்லையில் சீனப்படைகள் தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்ததில் இருந்தே இந்த செயலிகளைத் தடை செய்யக் கோரிக்கை எழுந்து வந்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   இது குறித்து சிலிகான் வேலி முன்னாள் தலைவரான வெங்கடேஷ் சுக்லா, ”டிக்டக் செயலி மிகவும் வேகமாக  வளர்ந்து டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்குச் சமமாக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.   ஒரு சீன செயலி இவ்வளவு வளர்ச்சி அடைவது அமெரிக்க பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கக் கூடியது ஆகும்.

சீனாவில் அமெரிக்கச் செயலிகளான முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.   அப்படி இருக்க அமெரிக்காவில் சீன செயலிகளை ஏன் தடை செய்யக் கூடாது.  சீன செயலிகள் அனைத்தையும் தடை செய்வதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பு அபாயத்தைக் குறைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ராணுவம் தனது வீரர்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.  அப்போது இந்த செயலி பாதுகாப்பு அச்சுறுத்தலான செயலி எனக் கூறப்பட்டது.  இதைப் போல் அமெரிக்கக் கடற்படையும் தடை விதித்துள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் டிக்டாக் செயலி பல 13 வயதுக் குழந்தைகளின் இ மெயில் விவரங்களை சேகரித்ததற்காக அமெரிக்க வர்த்தக ஆணையத்துக்கு57 லட்சம் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.